(எம்.எம்.சில்வெஸ்டர்)

மீன்பிடித் தொழிலுக்குச் சென்று அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை விடுவித்துத் தரும்படியாக இளையோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2018 இளையோர் ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 200 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப்போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கலப்பதக்கம் வென்றார்.

மிகவும் வறுமைக்கு மத்தியில் குடும்பத்தைக் கொண்டு செல்லும் பாரமியின் தந்தையான அந்தோனி டியூடருடன், மேலும் ஐந்து பேர் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி இனுக்சி 10 எனும் மீன்பிடிக் கப்பலில் திருகோணமலை கடற்பரப்பிலிருந்து பயணித்திருந்ததுடன், கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதியன்று இந்தியக்கடல் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பாரமியின் தந்தை, அவருடன் பயணித்த ஐந்து பேர் என மொத்தமாக ஆறு பேர் இந்தியக் கடல் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அந்தமான் தீவுகளில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற தனது தந்தை நான்கு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. எமது தந்தை இல்லாமல் எமது குடும்பம் மிகவும் வறுமையில் கஷ்டப்படுகிறது என தெரிவித்த பாரமி, அவரை விடுவித்துத் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.