தமிழ்நாட்டில்  செங்கல்பட்டு அரச வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா நோயாளிகள்  மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதை கண்டித்து நோயாளிகளின் உறவினர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

கொரோனா தொற்றின் 2 ஆவது அலை நாளுக்கு நாள்  அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பலியானோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில்  இருந்த அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது இந்தியா. நாளாந்த பாதிப்பு இலட்சத்தை  தாண்டி நிற்கிறது.

குறிப்பாக டெல்லி, அசாம், மகாராஷ்டிரா, ஜம்மு, பீகார்,  குஜராத், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றால்  இறப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

பல  வைத்தியசாலைகளில்  ஒட்சிசன்  தட்டுப்பாட்டாலும், நோயாளிகளை அனுமதிக்க இடங்கள்  இல்லாததாலும் வீதிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலை  தொடர்கிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 2 பெண்  உள்பட 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு வைத்தியசாலை நிர்வாகத்தை கண்டித்து அங்கு பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

அனைவரும் வைத்தியசாலை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மதியம் மருத்துக்கல்லூரி இயக்குனர் நாராயணபாபு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வைத்தியர்களின் கோரிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் வைத்தியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.