(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள தபால் நிலையங்களில் இம்மாதத்துக்கான புண்ணிய சம்பளத்தை பெற முடியாதவர்கள் தங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித்  ஆரியரட்ண வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

நாட்டில் தபால் ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள தபால் நிலையங்கள்  மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாதத்தின் முதல் வாரத்தில்  அரசாங்கத்தினால் வழங்கப்படும் புண்ணிய சம்பளம் பெறுபவர்கள் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்விடயம் குறித்து தபால் மா அதிபரிடம் வினவியபோது,

“எமது ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தபோதிலும், எமது அன்றாட செயற்பாடுகளை தங்குதடையின்றி மேற்கொண்டு வருகின்றோம். கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் சில தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளபோதிலும், கொவிட் 19 கட்டுப்பாட்டுச் செயலணியினரின் அனுமதியுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

இந்நிலையில், கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள தபால் நிலையங்களில் இம்மாதத்துக்கான புண்ணிய சம்பளத்தை பெற முடியாதவர்கள் தங்கள் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகத்தின் ஊடாக புண்ணிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து நாம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். ஆகவே, மாதாந்த புண்ணிய சம்பளத்தை பெறுபவர்கள் தங்கள் பகுதி பிரதேச செயலகத்துக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.