(நா.தனுஜா)
பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் யோசனை எந்தவொரு அடிப்படையுமற்றது. எனவே இந்த யோசனையை இலங்கைப் பாராளுமன்றம் நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு இலங்கைவாழ் சிறுபான்மையின சமூகத்தின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கான நியாயங்களைத் தேடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் வகையிலான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன்னரே அரசாங்கத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளினால் இலங்கை  முஸ்லிம் சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். இந்த புதிய யோசனை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளான நிகாப், புர்கா போன்றவை சட்டவிரோதமானவையாக்கப்படுவதுடன், அவர்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்படுவதற்கு அது வழிவகுக்கும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பின்னர் இதேபோன்ற தற்காலிகத்தடையொன்று விதிக்கப்பட்டது. அதன் விளைவாக முகத்தை மூடாமல் தலையை மாத்திரம் மறைக்கும் வகையிலான ஹிஜாப் ஆடையை அணிந்த முஸ்லிம் பெண்கள் ஓரங்கட்டப்பட்டமை மற்றும் பாடசாலை, மருத்துவமனை, பல்கலைக்கழகம் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை  உள்ளடங்கலாக முஸ்லிம் பெண்கள் எதிர்கொண்ட பல்வேறு பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தலொன்றைச் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போதைய இந்த புதிய யோசனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் முன்வைக்கப்பட்டிருப்பதுடன் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகள் 'மதரீதியான தீவிரவாதத்தின் ஓர் ஆடையாளம்' என்றும் எனவே தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவை தடை செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணிவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.