(நா.தனுஜா)
சினோபார்ம் தடுப்பூசிக்கு எதனடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு எழுப்பியுள்ள நிலையில், அது குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மறுத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சீன தடுப்பூசிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துமாறு எமது அமைப்பு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தது. எனினும் அந்த விண்ணப்பம் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ், சீன தடுப்பூசிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல்களை வழங்குவதற்கு மறுப்பதாக மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீன தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை எவ்வாறு அனுமதியளித்தது என்பது பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக எமது அமைப்பு மீண்டும் மேன்முறையீடு செய்துள்ளது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.