(எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரட்ண 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்ற பிரவீன் ஜயவிக்ரம 380 புள்ளிகளுடன் பந்துவீச்சுத் தரவரிசையில் 48 ஆவது இடத்தை வகிக்கிறார்.

அண்மையில் நிறைவடைந்த பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ண 428 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இத்தொடரில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 244 ஓட்டங்களை அடித்து தனது முதல் இரட்டைச் சதத்தையும் பதிவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட் சபையில் துடுப்பாட்ட டெஸ்ட் தரவரிசை கணக்கிடப்பட்டது. இதில் 677 புள்ளிகளுடன் 15 ஆவது இடத்திலிருந்த திமுத் கருணாரட்ண 45 புள்ளிகளைப் மேலதிகமாகப் பெற்று 4 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தைப் பிடித்தார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் இவருக்கு அடுத்தப்படியாக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான எஞ்சலோ மெத்தியூஸ் 24 ஆவது இடத்திலும், தனஞ்சய டி சில்வா 32 ஆவது இடத்திலும், தினேஷ் சந்திமால் 50 ஆவது இடத்திலும், குசல் மெண்டிஸ் 54 ஆவது இடத்திலும் உள்ளனர்.

பங்களாதேஷ் தொடரில் பிரகாசித்த லஹிரு திரிமான்ன 60 ஆவது இடத்துக்கும், ஓஷத பெர்னாண்டோ 59 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

இதேவேளை, அறிமுக டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுக்களை வீழ்த்திய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு  48 ஆவது இடம் கிடைத்துள்ளதுடன், மற்றுமொரு  இளம் சுழற்பந்துவீச்சாளரான ரமேஷ் மெண்டிஸுக்கு 88 ஆவது இடம் கிடைத்துள்ளது. டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் இலங்கை சார்பாக சிறந்த இடத்தில் (21 ஆவது) சுரங்க லக்மால் உள்ளார்.