சுகாதாரப் பிரிவினரின் கொவிட் 19 தொடர்பான அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான மக்களுடன் அட்டமி பூஜை நடத்திய வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு ஞான வைரவர் ஆலயத்தை சுகாதார துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இன்று (05.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் கொவிட் 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் அதன் பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று (04.05) மாலை விசேட பூஜையாக அட்டமி பூஜை இடம்பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த ஆலயத்திற்கு விஜயம் செய்த சுகாதாரப் பிரிவினர் அங்குள்ள சுகாதார நடைமுறைக் கண்காணித்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய குருக்களை அழைத்து அங்குள்ள சுகாதார விதிமீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாட்டையும் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன், ஆலயக் குருக்கள் மற்றும் நிர்வாகத்தினரை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.