இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் 'எனிமி' என்ற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் நடிகர் விஷால், அடுத்ததாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அடங்கமறு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். 

இவரது இயக்கத்தில் தயாராக இருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் விஷால், கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக 'மேயாத மான்' பட புகழ் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் அவருடைய 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

படத்தின் தலைப்பு  ஃபர்ஸ்ட் லுக், படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது சிம்பு நடிப்பில் தயாராகும் 'பத்து தல', இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் பெயரிடப்படாத படம், ராகவா லோரன்ஸ் நடித்து வரும் 'ருத்ரன்', 'ஐரா' படத்தை இயக்கிய இயக்குநர் கே. எம் சர்ஜுன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவரது நடிப்பில் தயாரான 'குருதி ஆட்டம்', 'ஓமணப் பெண்ணே', 'பொம்மை', 'ஹாஸ்டல்' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.