கிளிநொச்சி  சாந்தபுரம் கிராமத்தில் நேற்று மாலை ஐந்து  மணியளவில் கைப்பற்றப்பட்ட எட்டு இலட்சத்து 15 ஆயிரம் ரூபா போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸாரும், பொலீஸ் விசேட பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலீஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கிளிநொச்சி விசேட பொலீஸ் பிரிவின் உப பொலீஸ் பரிசோதகர் என். சோமேஸ்வரன் என்பவருக்கு அவரது தனிப்பட்ட தகவலாளியால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய நேற்றைய தினம் மாலை ஐந்து மணிக்கு சந்தேகத்திற்கிடமான சாந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வீடு சோதனையிடப்பட்ட போதே மேற்படி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் எட்டு இலட்சத்து 15 ஆயிரம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதனுடன் தொடர்புடைய  ஏனையவர்கள் தொடர்பிலும் பொலீஸாரும், பொலீஸ் விசேட பிரிவினரும் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த  போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு சென்றுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.