எம்.மனோசித்ரா

கொவிட் பரவல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை வெற்றி கொள்ள சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

எனவே நடமாடும் வைத்தியசாலைகள் , பி.சி.ஆர். இயந்திரங்கள் , தீவிர சிகிச்சை பிரிவுகள் , செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள இலங்கைக்கு உதவுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி.பி.மெதேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி.பி.மெதேரி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

தூதுவருடனான சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்ததாவது :

இலங்கை கொவிட் தொற்றின் காரணமாக மிக நெருக்கடியான சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எமது நாட்டில் மூன்றாம் அலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் உதவிகள் தேவைப்படுகின்றன. நடமாடும் வைத்தியசாலைகள் , பி.சி.ஆர். இயந்திரங்கள் , தீவிர சிகிச்சை பிரிவுகள் , செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்படுகின்றன.

நாம் தற்போது எதிர்க்கட்சியாகவுள்ள போதிலும் , தாய் நாட்டுக்கு உதவுவதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுகின்றோம்.

உங்களுடனான சந்திப்பின் இலக்கு மேற்கூறிய வியடங்களில் ரஷ்யாவின் உதவியைப் பெற்றுக் கொள்வதேயாகும்.

தீவிர சிகிச்சை பிரிவுகளை செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்டவற்றுடன் சகல வசதிகளுடனும் கூடியதாக எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பியுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவுகள் மாத்திரமின்றி சாதாரண படுக்கைகள் கூட போதுமானதாக இல்லை. 

கொவிட் பரவல் மாத்திரமின்றி டெங்கு நோயினாலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில் கொவிட் தவிர ஏனைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு படுக்கைகளுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. எனவே இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இந்த அவரச தேவையை பூர்த்தி செய்வதற்கு ரஷ்யா உதவும் என்று நம்புகின்றோம்.