(நா.தனுஜா)

ஊடக சமூகமானது தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கைவிட்டு நமது சமூகத்தின் பொதுவான நலனை நோக்கி செல்லவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் எந்த திட்டமும் வரவு செலவு  திட்டத்திலில்லை - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் | Virakesari.lk

சர்வதேச பத்திரிகை தினத்தை முன்னிட்டு 'சமகால அரசியல் நிலவரங்களுக்கு மத்தியில் ஊடக சுதந்திரமும் ஊடகங்களின் பெறுப்புகளும்' எனும் கருப்பொருளில் இன்று திங்கட்கிழமை இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் இணைவழிக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் உரையாற்றிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேலும் கூறியதாவது:

தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கைவிட்டு நமது சமூகத்தின் பொதுவான நலனை நோக்கி செல்லுமாறு ஊடக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதிகாரத்தினை எதிர்கொண்டு உண்மையை தைரியமாகக்கூற ஒரு தளத்தை வழங்குவது முற்போக்கான ஊடக சமூகத்தின் பொறுப்பாகும்.

2002 - 2004 காலப்பகுதியில் நான் ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் என்னால் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பத்திரிகைக் கல்லூரி நிறுவனம் நிறுவுதல், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவை நிறுவுதல், பத்திரிகை ஒன்றியத்தை ஒழித்தல், தண்டனைச் சட்டத்திலிருந்து குற்றவியல் அவதூறு பிரிவை நீக்குதல் ஆகியவை தற்போதும் பொருத்தப்பாடுடையவையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

வரலாறு முழுவதும் நமது சமுதாயத்தில் பிரிவினைவாத சித்தாந்தங்களின் அடிப்படையில் இன மற்றும் மதரீதியான நம்பிக்கையின்மை, சந்தேகம் மற்றும் மோதல்களைத் தூண்டுவதில் சில ஊடகங்களின் முக்கிய பங்காற்றின என்று கூறலாம். தற்போது ஊடகத்துறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசாங்கமும் உரிய அமைச்சரும் கவனம் செலுத்தவேண்டும்.

ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பு, சுயாதீன ஊடகவியலாளர்களின் விதி மற்றும் கொடுப்பனவுகள், ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துதல், சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல், தனியார் ஊடகவியலாளர்களின் கொடுப்பனவுகளைப் புதுப்பித்தல், பத்திரிகையாளர்களின் தொழில் நிலையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்கல் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும்.

சில ஊடகங்கள் கொவிட் -19 நிலைவரத்தை அறிக்கையிடும் விதம் குறித்து சமூகத்தில் கடுமையான அதிருப்தி உள்ளது. தனிநபரின் சுயாதீனத்தை அவமரியாதை செய்தல், மனிதநேயம் இல்லாது போதல், ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளை புறக்கணித்தல், தொழில்முறை அல்லாத அறிக்கையிடல் போன்ற பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. ஆனால் அறிக்கையிடல் சார்ந்த அறிவுப் பற்றாக்குறை மற்றும் அறிக்கையிடலில் பயிற்சியின்மை என்பவற்றால் ஊடகவியலாளரை மட்டும் இதற்காகக் குறைகூறமுடியாது. அந்த அறிவையும் பயிற்சியையும் அதிகரிப்பது காலத்தின் தேவையாகும்.