செரீக்கும் சுரங்க மெண்டிஸும் இணைந்து செயற்பட்ட விளையாட்டு அணி, அதன் செயற்பாடுகள் மறக்க முடியாதவை. இருவரில் ஒருவர் இஸ்லாமியர் மற்றவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சிங்களவர்.

இந்த இருவருமே திட்டம் போட்டு ஒரு காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். இருவரும் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்றால் அதனை தத்ரூபமாக செய்து முடிக்கும் திறமையானவர்கள்.

தொடர்ந்து பல வருடங்களாக போட்டிகள் நடத்தி வந்த நிலையில் தற்போது எதுவும் நடைபெறுவதில்லை. எல்லோரும் தனித்தனியாக அவரவர் வாழ்க்கையை பார்த்து போய்க்கொண்டிருக்கின்றனர்.

பல்லின கூட்டுவாழ்வு அறவே அற்ற ஒரு காலமாக இது உள்ளது. தேவாலயங்களில் நடந்த ஈஸ்ரர் தாக்குதலின் பின் ஒன்று கூடமுடியாமல் கொரோனாவும் பிரித்துவிட்டது. ஆனாலும் மனங்களால் அவர்கள் இணைந்தேயுள்ளனர்.

“நான் 6 வயதாக இருக்கும் போது இந்த காக்கைதீவில் எனது பெற்றோருடன் குடியேறினேன். அன்றில் இருந்து இன்றுவரை இங்கு வாழும் ஒவ்வொருவரைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

அதைபோல் எல்லோரும் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே “காக்கைதீவு குடியிருப்பாளர்கள் தினம்”.என்றார் 40 வயதான கவாஸ்கர்”.

காக்கைதீவு என்பது கொழும்பு - 15 மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள பெருநிலத்துடன் தொடர்புபட்ட நிலப்பகுதி.

இந்த தீவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்து,  இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் என பல்மத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபேல் மத வழிபாட்டு தலங்களுக்கும் குறைவில்லை. இங்கு சிறு சிறு நிலப்பரப்புகளில் ஒரு கோயில்கள், ஒரு பள்ளிவாயல், ஒரு சிற்றாலயம், ஒரு விகாரை என அமைந்துள்ளன.

விசேட மத விழாக்களின் போது எல்லா இன மத மக்களும் கலந்து, இணைந்து செயற்படுவதும் வழிபடுவதும் நடைபெறுகிறது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வழிபடுவது போல் இந்து தேவாலயங்களில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்தே வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

இனம் என்று பார்த்தால் சிங்கள - தமிழ் என நிற்பவர்கள் மதம் என்று வரும்போது கிறிஸ்தவம், இந்து, பௌத்தம், இஸ்லாம் என நான்காக பிரிந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கூடவைப்பதே “ காக்கைதீவு குடியிருப்பாளர் தினம்.”

கடந்த 2019 ஆண்டில்  இருந்து இந்த தினம் கொண்டாடப்பட முடியாமல் போனதை வருத்தத்துடன் நினைவுகூருகின்றனர் அந்த மக்கள்.

“இந்த நிகழ்வு தமிழ் – சிங்கள புதுவருப்பிறப்பு நிறைவடைந்து 2 ஆவது அல்லது 3 ஆவது கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படும். காக்கை தீவு நலன்புரிச்சங்கம் இதை ஏற்பாடு செய்துவந்தது. 

இதில் கணாமுட்டி உடைத்தல், தேங்காய் துருவுதல், யானைக்கு கண் வைத்தல், தலையணைச் சண்டை, வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், மரதன் ஓட்டம், பேன்ற விளையாட்டுக்களை சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோருக்கும் ஏற்பாடு செய்து நடத்தி வந்தோம். ஈஸ்ரர் தாக்குதலின் பின்னும் அதன் பின் வந்த கொரோனாவாலும் எம்மால் இதை செய்யமுடியாது போயிற்று” என்று கூறும் சக்திவேல் கவாஸ்கர்(40) கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் காக்கைதீவு நலன்புரிச் சங்கத்தின் தலைவராக செயற்பட்டவர். அவர் மேலும் அது பற்றி விளக்கினார்.

“அந்த நேரம் இந்த எண்ணத்தை எங்களுள் ஒருவரான சிங்கள இனத்தைச் சேர்ந்த கயான் என்ற நண்பரே எமக்குள் வேரூன்ற விட்டார்.

அவர் வைத்த புள்ளி தான் எல்லா மக்களையும் இணைத்த பெரும் நிகழ்வாக மாறியது. 2017 இல் முதல் முறையாக காக்கைதீவு குடியிருப்பாளர்கள் தினத்தை ஏற்பாடு செய்த போது எல்லோரும் பங்குபற்றவில்லை.

அப்போது இருந்த சிறு சிறு குறைபாடுகளை அடுத்தடுத்த வருடங்களில் நிவர்த்தி செய்து அனைவரும் கலந்துகொள்ளும் விதத்தில் முன்னெடுத்தோம்.

நம்மை சுற்றியிருந்தவர்களின் உதவியும் அங்கத்தவர்களின் பங்களிப்பும் தான் நிகழ்வைப் பெரியளவில் நடத்த உதவியது. எமது சங்கத்தின் செயற்குழுவில் பசீர், ரிஸ்வான், அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்த இல்ஹாம் போன்று நிறைய முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களும் கயான், ரங்க, பதும், சுரங்க, சுது போன்ற சிங்கள இனத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களும் உள்ளனர். அதேவேளை, நான், ஹரி அண்ணா, யோகி, செல்வரட்ணம் அங்கிள், கமல், சதீஷ் என தமிழர்களும் இருக்கிறார்கள். எமது சங்கத்தில் எந்தவொரு தேவைக்கும் “செய்வமா?” என்று கேட்டால் போதும் “ நீவா மச்சான் நான் செய்றன்” என்று ஒரு வார்த்தை தான் சொல்லுவர். எல்லாவற்றையும் முன்னின்று செய்தும் செய்வித்தும் சமூகத்தை இணைத்து நின்றவர் மறைந்த எமது உறுப்பினர் இல்ஹாம். அவர்  மாரடைப்பு காரணமாக எம்மை விட்டு பிரிந்துவிட்டார் ” என்கிறார் கவாஸ்கர் கவலையுடன்.

 “ 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எல்லாவற்றையும் ஒரு கணம் குலைத்துப்போட்டது. ஆனாலும் எமது குழுநிலை மனப்பாங்கு நாம் யாரையும் இம்சைப்படுத்த அனுமதிக்கவில்லை.

இணைந்தே செயலாற்றினோம். இந்த தற்கொலைத் தாக்குதலில் எமது அயலவர் ஒருவரையும் நாம் இழந்தோம். அன்றைய துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இந்து மதத்தை சேர்ந்த நண்பர் ஒருவர்.

சம்பவ தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற சமயமே கொல்லப்பட்டிருந்தார்.

அதேபோல் எமது பகுதியில் வசித்து வந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை என ஒரு  குடும்பமும் கொல்லப்பட்டனர். எமது கத்தோலிக்க நண்பரான போல் துரைராஜ் டிரோஸன் அவரது மனைவி, மகள் என அனைவரும் பாதிப்புக்குட்பட்டனர். இன்றும் உடல் காயங்களுடன் வாழ்கின்றனர்.

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் நாம் இணைந்து செயலாற்ற முயற்சித்தோம். ஆனால் கொரோனா எங்களைத் தடுத்துவிட்டது. ஆனாலும் கொரோனா காலமும் எங்களை இணைந்து செயல்படவைத்தது.

கொரோனா காலத்தில் ஊரடங்கு, தனிமைப்படுத்தல் என  தொடர்ந்தபோது, காக்கைதீவில் வசிக்கும் மக்கள் அயலவர்களின் தேவை அறிந்து புரிந்துணர்வுடன் செயற்பாட்டார்கள்.

உதாரணமாக மரக்கறி வகைகள்,  பாண், தேங்காய் போன்றவற்றை கொள்வனவு செய்தும் வேறு நபர்களின் உதவியுடன் பெற்றும் நமது இளைஞர்கள் குறிப்பாக என்னுடன் யோகி,ஹரி அண்ணா, கயான், ரங்க, லோகேஸ்வரன் மற்றும் சுதா அண்ணா ஆகியோர்  கக்கைதீவு மக்களுக்கு வழங்கினர்  ”

இவ்வாறு ஒன்றிணைந்து இக்கட்டான காலகட்டங்களில் தங்கள் கிராமத்தை கவனித்தனர் இந்த மக்கள். அதேநேரம் குண்டுவெடிப்புக்கு பின்னர் கொரோனா என இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை சிலர் விதைத்தபோதும் அது இங்கு எடுபடவில்லை.

“எப்படித்தான் நான் இந்த மக்களின் முகத்தில் முழிபேனோ ? நாளைக்கு விடிந்தால் எப்படி நான் முகங்கொடுக்கப்போகின்றேன்.

அவர்கள் நாளைக்கு எனது கடைக்கு வருவார்களோ ? என்ட கடையில் பொருட்கள் வாங்குவர்களா? என்ற பல கேள்விகளுடன் தான் நான் காலையில் நித்திரை விட்டு எழும்புவேன்.

அவர்கள் ஒருவேளை ஏதாவது கேள்விகேட்டால் எவ்வாறு நான் பதில் சொல்வேன் என்ற மனநிலை இருந்தது. அத்துடன் அனைத்தையும் தாங்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன்.” என்கிறார் அந்த இடத்தில் 30 வருடத்திற்கு மேலாக கடை நடத்திவரும் 63 வயதுடைய ஆரிப்.

ஆரிப் 35 வருடங்களுக்கு முன்னர் காக்கைதீவுப் பகுதி பெரும் காடாக இருந்தபோது குடியேறியவர். தற்போது திருமணம் முடித்து 3 பிள்ளைகள் சகிதம் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் அவர் பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. அந்த மக்கள் சகஜமாக அவருடன் பழகியதை அவர் நினைவு கூர்ந்தார்.

“இங்குள்ள மக்கள் சரியான புந்துணர்வுடன் வாழ்கின்றவர்கள். நடந்த தாக்குதல் ஒரு குழுவால் மேற்கொள்ளபட்டது என்றும் அவர்களக்கும் சாதாரண இஸ்லாமிய மக்களுக்கும் தொடர்பில்லை என்ற தெளிவுடன் இந்த மக்கள் நடந்துகொண்டனர். அது நாம் ஏற்கனவே ஒன்றாக இணைந்து பயணித்ததன் பரிசுதான். 

ஆனாலும் எமது மதத்தின்பெயரால் நடத்தப்பட்டதால் எங்களது மனதிலும் ஒரு பெரிய குற்ற உணர்வு ஆட்கொண்டது உண்மைதான். ” என்கிறார் ஆரிப் கவலையுடன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தனது கடைக்கு வருகை தருபவர்களின் வரவு எவ்விதத்திலும் குறையவுமில்லை என்பதை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்ததர்.

“இவ்வாறு ஒரு குற்ற உணர்வு என் மனதில் இருந்தாலும் நான் வெளிக்காட்ட விரும்பவில்லை. அதனால் நான் கடையை பூட்டி வைக்க விரும்பவில்லை. கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டடேன். இப்போது ஒருவர் வந்துபோனார் அவதானித்தீர்களா ? கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் தனது குடும்ப அங்கத்தவர்களை ( தந்தை, தாய், மகன் ) இழந்து எமது காக்கைதீவில் வசிக்கும் முதியவர்.

வழமையாக எவ்வாறு இந்த மக்கள் எம்முடன் பழகினார்களோ தற்போது எவ்வித வேறுபாடுகளுமின்றி பழகுகின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்து வேரூன்றிய புரிந்துணர்வு. அதை வலுப்படுத்தும் வகையில் நாம் ஒன்றிணைந்து செயற்பட்டதும்தான்.” என்கிறர் பெருமிதத்துடன்.

காக்கைதீவு குடியிருப்பாளர் தினம் பற்றி அவரிடம் விசாரித்தபோது,“ ஆமாம் இது மிகத்தேவையான ஒன்று. எனது பிள்ளைகளும் அதில் கலந்துகொள்வார்கள். கணாமுட்டி உடைக்கும் விளையாட்டில் எனது மகன் பரிசெல்லம் பெற்றிருக்கிறார். கால்பந்தாட்டம் என்றால் மகன் நல்லா விளையாடுவார். எந்த வேறுபாடுமின்றி நாம் சேர்ந்து செயற்பட்டு மகிழும் நாள் அது.” என்கிறார் ஆரிப்.

இவர்களையெல்லாம் புரிந்துணர்வுடன் செயற்படவைத்த அந்த “காக்கைதீவு குடியிருப்பாளர்தினம்” எப்போது கொண்டாடுவது என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இவர்கள்!

வீ.பிரியதர்சன்