'அசுரன்' பட புகழ் நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. 

அதனைத் தொடர்ந்து 'என் ஆளோட செருப்ப காணோம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தானாசேர்ந்தகூட்டம்', 'ராட்சசன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 

இருப்பினும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான 'தம்பி' படத்தில் நடித்திருக்கும் இவர், தற்போது 'அடவி' என்ற தமிழ் படத்திலும், 'நவரசா' என மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் அந்தாலஜி பாணியிலான திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகையாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நடிகைகளில் அம்மு அபிராமியும் ஒருவர். 

இவர் அண்மையில் தன்னுடைய ட்விட்டர் பதிவில், 'கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் நானும் பாதிக்கப் பட்டிருக்கிறேன். கொரோனாத் தொற்றின் முதல் கட்ட அறிகுறிகள் தென்பட்டவுடன், பரிசோதனை செய்துகொண்டேன். 

தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். 

விரைவில் நலமுடன் வலிமையுடன் திரும்பி வருவேன். வீட்டில் இருக்கும்போதும் முககவசத்தை அணிந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.' என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை பரவலில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் திரை உலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.