(எம்.எம்.சில்வெஸ்டர்)

அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் பெறுதியை வீழ்த்திய 16 ஆவது சர்வதேச வீரராகவும் முதல் இலங்கையர் என்ற சிறப்பையும் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம பெற்றுக்கொண்டார்.

145 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்கள் அல்லது 10 விக்கெட்டுக்களுக்கும் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் 16 பேர் மாத்திரமே காணப்படுகின்றனர்.

இந்தப் பட்டியலில் 6 இங்கிலாந்து வீரர்கள், 3 அவுஸ்திரேலிய வீரர்கள், 2 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள், 2 தென் ஆபிரிக்க வீரர்கள், ஒரு இந்திய வீரர், ஒரு பாகிஸ்தானிய வீரர் மற்றும் ஒரு இலங்கை வீரர் அடங்குகின்றனர்.

கண்டி பல்லேகலையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை பெற்ற இளம் இடது கை சுழற்பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி மொத்தமாக 11 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்தப் பட்டியலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வீரர் ஒருவர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்களால் வெற்றியீட்டியதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 1க்கு 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 

இப்போட்டியின் நாயகனாக பிரவீன் ஜயவிக்ரம தெரிவானதுடன், 428 ஓட்டங்களை குவித்த இலங்கை அணித்தலைவர் தொடரின் நாயகனாக  தெரிவானார்.

அறிமுகப் போட்டியில் 10 விக்கெட்டுக்கள் அல்லது 10 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய வீரர்கள் விபரம் கீழே அட்டவணையாக தரப்படுகிறது.