(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும். அத்துடன் கொவிட் தொற்றுக்குள்ளாகும் இந்தியர்களை எமது நாட்டில் தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதற்காக பல்வேறு கட்டணங்களில் ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.க. செயலாளராக பாலித்த ரங்கே பண்டார? | Virakesari.lk

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸுக்கு நிகரான உருமாரிய கொரோனா வைரஸ் எமது நாட்டில் பரவி வருவதாக பரிசோதகர்கள் அரசாங்கத்துக்கு கடந்த மாதம் 8ஆம் திகதி அறிவித்திருக்கின்றது.

இந்த வைரஸின் பயங்கர தன்மையை கண்டுகொள்ளாது அரசாங்கம் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் செயற்பட இடமளித்திருந்தது. இதனால் மக்கள் கடைத்தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொருட்களை கொள்வனவு செய்துவந்தனர்.

அதேபோன்று கதிர்காம யாத்திரையில் நாளா பக்கத்தில் இருந்தும் சென்று மக்கள் அங்கு அலைமோதினர். நுவரெலியாவில் இடம்பெற்ற வசந்தகால கொண்டாட்டங்களும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல்  மேற்கொள்ள இடமளித்திருந்தத்துடன் அங்கும் மக்கள் பாரியளவில் ஒன்றுகூடியிருந்தனர். இவ்வாறு மக்கள் கொவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் எதனையும் பின்பற்றாது புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அத்துடன் பிரித்தானிய உருமாரிய வைரஸ் நாட்டுக்குள் பரவி வருவதை அரசாங்கம்  அறிந்துகொண்டே, புத்தாண்டு சமயத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் நடமாட இடளித்திருந்தது. அதனால் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.  பேலியகொட, பிரிண்டெக்ஸ், சிறைச்சாலை கொத்தணி போன்று தற்போது அரசாங்கத்தின் கொத்தணி உருவாகி இருக்கின்றது. இந்த நிலைக்கு அரசாங்கமே பொறுக்குகூறவேண்டும்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் இந்தியர்களுக்கு எமது நாட்டில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஏற்பாடு செய்து, அதற்கு பல்வேறு கட்டணங்களில் பெக்கேஜ்களை அறிமுகம் செய்திருக்கின்றுது. இதற்கான கொவிட் மத்திய நிலையங்களாக காலி, கம்பஹா, தங்கல்ல, நீர்கொழும்பு.கண்டி, கொழும்பு, சீகிரிய, அம்பந்தோட்டை, போன்ற  இடங்களில் இருக்கும் ஹோட்டல்கள். விடுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் பணத்துக்காக கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய பிரஜைகளை ஹோட்டல்களிலும் விடுதிகளிலும் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் புத்தளம் போன்ற பிரதேசங்களுக்கு கடல் மார்க்கமாகவும் இந்திய பிரஜைகள் வருகின்றனர். இவ்வாறு வந்த 3பேர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 

அதனால் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே வீரர் ஒருவரை மக்கள் தெரிவு செய்தார்கள். ஆனால் தற்போது முழு நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகி இருக்கின்றது. இதற்காக 69இலட்சம் பேரும் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.