வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை பொலிசாரால் முறியடிக்கப்பட்டது. குறித்த பகுதியில் மரக்கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்றையதினம் அதிகாலை அங்கு சென்ற பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது, கருங்கற்களிற்குள் மறைக்கப்பட்ட நிலையில் முதிரை குற்றிகளை கடத்திச்செல்ல முற்பட்டமை தெரியவந்தது. பொலிசாரை கண்டதும் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில்,  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும், 43 முதிரைக்குற்றிகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.