தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை பதினோரு மணி அளவில் நடைபெற்று நிறைவடைந்த இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தமிழகத்தில் தொடங்கியது.

முதலில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன .இதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து பகல் 2.15 மணி வரை எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க கூட்டணி 143 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி  90 இடங்களிலும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கூட்டணி ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

கன்னியாகுமரி மக்களவைக்கான மக்களவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.

முன்னாள் அமைச்சர்களான மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.

மாலை 4 மணி அல்லது 6 மணி அளவில் கட்சிகளின் வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் உறுதியான முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.