கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கேரள பொலிஸார் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை இந்திய மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

அந்த வகையில், கேரள மாநில பொலிஸார் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியாகி வைரலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். 

இந்த பாடலுக்கு பொலிஸார் முகக்கவசம் அணிந்தபடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். 

கேரள பொலிஸாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த காணொளி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “கேரளா பொலிஸ் வழி, எப்போதும் தனி வழி. எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி” என குறிப்பிட்டுள்ளார்.