ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் உடுத்துறை மற்றும் மணற்காடு பகுதிகளில் வைத்து சுமார் 2கோடி  60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவினை பருத்தித்துறை மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் இதனை கடத்திய 5 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவினை கடத்தி வருவதாக மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினரின் உதவியுடன் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணற்காடு பகுதி கடற்பரப்பில் வைத்து 100 கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றியிருந்ததுடன் அதனை கடத்தி வந்த மூவரையும் கைது செய்திருந்தனர். அத்துடன் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய படகொன்றையும் கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை உடுத்துறை பகுதியில் வைத்து 30 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியதுடன்இ கடத்தலில் ஈடுபட்ட  இருவரையும் கைது செய்திருந்தனர்.

மணற்காட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 கோடி பெறுமதியானது எனவும் உடுத்துறை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 60 இலட்சம் பெறுமதியானது எனவும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்கு தீர்மானித்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.