(எம்.மனோசித்ரா)
அத்தியாவசிய செயற்பாடுகளை தவிர்த்து நாட்டை முழுமையாக முடக்குவதற்கு கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர்  நிலாந்த  பிரேமரத்ன தெரிவித்தார்.

இதுபோன்ற செய்திகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமையின் காரணமாகவே, புதன்கிழமை இரவு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விசேட அறிவிப்பொன்றை விடுத்து அதனை மறுத்திருந்தார். இவ்வாறான போலியான செய்திகள் வெளியாகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும், எனவே மக்கள் சகல பொருட்களையும் கொள்வனவு செய்து அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து புதன்கிழமை இரவு விசேட அறிவிப்பொன்றை விடுத்த இராணுவத்தளபதி , ' நாடளாவிய ரீதியில் நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை. எனினும் தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்படும் பிரதேசங்கள் முன் அறிவித்தல் இன்றி முடக்கப்படும்.' என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.