(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டியேற்படும் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்காமலுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் பரவலைப் கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதோடு , பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இலங்கையில் குறைந்தளவான பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பரிசோதனைகளில் நூற்றுக்கு 20 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

அஷோக அபேசிங்க

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு இலங்கை மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்களை தனிமைப்படுத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் இவ்வாறு இந்தியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் , தற்போது மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் மாத்திரமே கையிருப்பில் உள்ளன. ஒரு மாதத்தில் இது நிறைவடைந்துவிடும். அதன் பின்னர் தடுப்பூசி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல் அரசாங்கத்திடமில்லை.

இவ்வாறான நிலையில் மக்களின் வாழ்க்கை செலவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க வேண்டியேற்படும் என்ற அச்சத்திலேயே போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமலுள்ளன. எவ்வாறிருப்பினும் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் என்றார்.