(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பாதுகாப்பு படைகள் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சிகளை பெறுகின்றன. 

அவ்வாறானதொரு புறச்சூழலில் அந்த நாடுகளின் பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் நட்பு நாடுகளுக்கு விஜயம் செய்வது பொதுவானதொரு விடயமாகும். 

ஆனால் சீனா பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் பின்னணியில் உள்ள முக்கியத்துவம் குறித்து எமக்கு பிரச்சினைகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத்தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகள் உள்நாட்டு பாதுகாப்பை உலக பாதுகாப்புடன் தொடர்புடையவர்களாவர். 

அமெரிக்க இராணுவத்தளபதி கூட இலங்கைக்கு விஜயம் செய்ததில்லை. அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருவதானாலும் இரண்டாம் , மூன்றாம் நிலையிலுள்ளவர்களே விஜயம் செய்வார்கள் என்றார் .