அஞ்சல் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு தங்கம் : உசேனுக்கு 9 பதக்கங்கள்

By MD.Lucias

20 Aug, 2016 | 10:23 AM
image

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4*100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு  தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4ஓ100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4*100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நின்றது.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4*100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை இவர் தட்டிச் சென்றார். 

இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், 37.62 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த பின்லாந்து நாட்டின் ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி, அமெரிக்காவின் பிரபல ஓட்டப்பந்தய வீரரும், நீளம் தாண்டுதல் வீரருமான கார்ல் லிவீஸ் போன்ற பிரபல ஜாம்பவான்களின் தரவரிசையை மிக குறைந்த வயதிலும், குறுகிய காலகட்டத்திலும் எட்டிப்பிடித்து, அசுர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right