(செய்திப்பிரிவு)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும். 

கடந்த 5 ஆண்டுகள் மாகாணசபை சேவையில் மக்கள் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. எனவே எதிர்வரும் தேர்தலில் வடக்கு மக்கள் மாவை சேனாதிராசாவுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அரசியலில் மிகுந்த அனுபவமுடையவர். எனவே அவர் மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவானால் அது வரவேற்கத்தக்க விடயமாகும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயற்பட இது உதவும். கூட்டமைப்பிற்குள் எவ்வித பிளவுகளும் ஏற்பட்டு விடக் கூடாது. ஏதேனும் பிளவுகள் ஏற்படுமாயின் அது தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மக்கள் இவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வடகிழக்கு மக்கள் மீது கரிசணை கொண்டவன் என்ற ரீதியிலேயே உரிமையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் அவர்களுடன் இணைந்து விமர்சனங்களுக்கு மத்தியிலும் நான் அந்த மக்களுக்கு சேவையாற்றியிருக்கின்றேன். அந்த மக்களுக்கு தொடர்ச்சியான இடைவிடாத சேவை கிடைக்க வேண்டுமெனில் வட மாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராசாவை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.