அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) முன்னிலையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் நேற்று (22) அழைக்கப்பட்டிருந்தபோதும் சம்மேளனத்தின் தலைவர் சமுகமளிக்காததால் கூட்டத்தை இடைநிறுத்த கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் நடவடிக்கை எடுத்தார். 

அதன்படி, மே மாதம் 06 ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அதன் முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாண்டோ ஆகியோரை அழைக்க நடவடிக்கை எடுப்பதாக கோப் தலைவர் தெரிவித்தார். 

கால்பந்து சம்மேளத்தின் நிறைவேற்று சபைக்கு 10 அங்கத்தவர்கள் தேர்தல் மூலம் நியமிக்கப்படுகின்ற போதிலும் அதற்கு மேலதிகமாக 18 அங்கத்தவர்கள் தலைவர் மூலம் நியமிக்கப்படுகின்றமை இங்கு புலப்பட்டதுடன் இது பாரிய சிக்கலொன்று என கோப் குழு சுட்டிக்காட்டியது. சம்மேளனத்தின் யாப்புக்கு அமைய இவ்வாறு இடம்பெற்றாலும் இது பாரிய ஒரு சிக்கல் என்பதால் உடனடியாக தலையிடுமாறு விளையாட்டு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு ஆலோசனை வழங்கியது. இவ்வாறு தலைவர் மூலம் 18 அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவதை தடுக்கும் வகையிலான கட்டளையொன்றை விரைவில் வெளியிடுவதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் இதன்போது தெரிவித்தார்.  

இந்த விளையாட்டு சங்கங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் குழுக்களை சங்கங்களே   அமைப்பதால் வெளிப்படைத்தன்மையின்றி இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக குழு சுட்டிக்காட்டியது. மேலும், கால்பந்து சம்மேளனத்தின் எதிர்வரும் தேர்தலுக்கான தேர்தல் குழுவின் தலைவருக்கு 750,000 ரூபாய் நிதியும், ஏனைய இரண்டு உறுப்பினர்களுக்கு 600,000 ரூபாய் நிதியும் வழங்கப்படுவது இங்கு புலப்பட்டதுடன் இது குழுவின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. தலைவரினால் நியமிக்கப்படும் 18 அங்கத்தவர்கள் இருப்பதனால் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கும் போது தலைவரின் தீர்மானத்துக்கு அப்பால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இங்கு புலப்பட்டது.    

மேலும், களுத்துறை கால்பந்து மைதானத்தை நிர்மாணிப்பதற்கு இத்தாலி கால்பந்து வீரர்களின் சங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 40,400 யூரோ (சுமார் 6 மில்லியன் ரூபாய்)  நிதியை முன்னாள் தலைவர் தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்துள்ளமையும், ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் போட்டி நடத்துவதற்கு வழங்கிய 60,000 டொலர் (சுமார் 6 மில்லியன் ரூபாய்) நிதி,  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 200,000 டொலர் நிதி சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மணிலால் பர்னாந்து மூலம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. 

இந்த நிதி மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மூலம் விசாரணைகளை முடித்து நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ள பின்னணியில், இதுபோன்ற நிதி முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று கூறி சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசியொன்று சமர்ப்பித்துள்ளமை இங்கு புலப்பட்டது. இதுபோன்ற நிதி மோசடி நடந்திருப்பது தெரியவந்ததையடுத்து தற்போதைய தலைவர் நிதி மோசடி எதுவும் நடக்கவில்லை என்று சத்தியக் கடதாசி மூலம் அறிவித்திருப்பது தீவிரமான விடயம் என குழு சுட்டிக்காட்டியது.

இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு மிகவும் கீழ் மட்டத்துக்கு வீழ்ந்திருப்பதாகவும் இவ்வாறான பாரிய நிதி கிடைக்கப்பெற்றும் இவ்வாறு கீழ் மட்டத்துக்கு வீழ்ந்திருப்பது மிகவும் சோகமான நிலை என கோப் தலைவர் தெரிவித்தார். எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தற்போதைய தலைவரையும்  முன்னாள் தலைவர் மணிலால் பர்னாந்துவையும் உடனடியாக கோப் குழு முன் அழைக்க வேண்டும் என்று கோப் குழு வலியுறுத்தியது.

அதேபோன்று, விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சு எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் அமைச்சின் ஊடாக நேரடியான மேற்பார்வை இடம்பெறவேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

விசேடமாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கால்பந்து சம்மேளனம் போன்ற சங்கங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என விளையாட்டு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், நலீன் பண்டார, எஸ்.எம். மரிக்கார் மற்றும் எஸ். இராசமாணிக்கம் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை கால்பந்து  சம்மேளன பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.