(எம்.மனோசித்ரா)

நாட்டில் சில தினங்களுக்கு கடும் மழையுடனான காலநிலை நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் , சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக காலை பாரிய வாகன நெறிசல் ஏற்பட்டது. பத்தரமுல்ல , ராஜகிரிய மற்றும் ஆமர்வீதி ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடும் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் கடும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தளம் தொடக்கம் கொழும்பு , காலி மற்றும் அந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றராகக் காணப்படும்.

காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.