(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகரத்தை முறையாக முகாமைத்துவம்  செய்யாவிட்டால் இலங்கை எதிர்காலத்தில் பூகோள  மட்டத்தில் அதிகாரமிக்க நாடுகளின் பொருளாதர மற்றும் அரசியல் போட்டித்தன்மைக்கு  முகம் கொடுக்க நேரிடும். இதனால் பாரிய விளைவுகளையும் இலங்கை எதிர்நோக்க நேரிடும்.  

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட  வெள்ளை யானை அபிவிருத்தி பணிகளை போன்றே துறைமுக நகர திட்டங்கள் 2014 ஆம் ஆண்டு காணப்பட்டது. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  சிறந்த திட்டமிடல்களினால்  கொழும்பு துறைமுக நகரம் இலங்கைக்கு முழுமையாக 2016 ஆம் ஆண்டு சொந்தமாக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர்   பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள 43 ஆவது படையணி காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது. 

இச்சட்டமூலம் உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சுயாதீனத்தன்மையினை பாதுகாக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. இவ்விடயத்தில் உயர் நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக காணப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகரை முறையாக  முகாமைத்துவம் செய்யாவிட்டால் இலங்கை பூகோள பொருளாதார , அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். அரசியல் ஸ்தீரத்தன்மை, பொருளாதார நிலைமை ஆகியற்றை அடிப்படையாகக் கொண்டே வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  நேரடி முதலீடுகளை மேற்கொள்வார்கள். 

தற்போது இந்நிலைமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர விவகாரம் தற்போது பொருளாதார முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்டு பூகோள அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாறான பின்னிணியில் கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர  சவாலை முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராபக்ஷ பொறுப்பேற்றார் என்று பெருமைக் கொள்ளும் ஆளும் தரப்பினர் உண்மை காரணிகளை அறிந்திருக்கமாட்டார்கள். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மீள் எழும் இலங்கை என்ற எண்ணக்கருவில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி குறித்த திட்டமிடல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சீன நாட்டு ஜனாதிபதி வருகைத்தந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம் பெறும்  சூழல் காணப்பட்டது. இதனால் முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி  தொடர்பில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை சீன நாட்டு ஜனாதிபதி முன்னிலையில் செய்துக் கொண்டார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது  கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி நிர்மாண பணிகளினால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, பொருளாதார முகாமைத்துவம், தேசிய பொருளாதாரத்தில்  நிலை, சட்ட திட்டங்கள்,பூகோள அரசியல் தன்மை ஆகிய அடிப்படை விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவில்லை. முறையற்ற வகையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கொழும்பு துறைமுக நகர  அபிவிருத்தி தொடர்பில் அதிக  கவனம் செலுத்தப்பட்டது.  இந்த அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஜித் தி கொஸ்தா தலைமையில் விசேட நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்தார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றது.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகள்  எவ்விதமான திட்டமிடல்களும் இல்லாத வகையில் ஏனைய அபிவிருத்தி பணிகளை போல் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால்  பலதுறைகள் பாதிக்கப்படும் குறிப்பாக சுற்றுசூழல் பாதிக்கப்படும் ஆகவே நிர்மாண பணிகளை உடனடியாக இடை நிறுத்தி,  இலங்கையின் துறைசார் தரப்பினர்களினதும் நிறுவனங்களினதும் ஆலோசனைகளை பெறுவது அவசியமாகும் என  குழுவின் அறிக்கை பரிந்துரை செய்தது.

அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்பட்டன.  இடைப்பட்ட காலத்தில் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு சிக்கல் நிலைக்கு தீர்வு காணப்பட்டன. 2016 ஆம் ஆண்டு முறையாக சட்ட வழிமுறைகளுக்கு அமைய கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

கடற்பரப்பில் மண்நிரப்பும் நடவடிக்கை  காணி சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டது துறைமுக அபிவிருத்தி ஒப்பந்தம் 2016. ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மறுபரிசீலனை செய்யப்பட்டு முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு  பாதிப்பை ஏற்படுத்தும் நிபந்தனைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. துறைமுக நகரம் 100 சதவீதம் இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரத்திற்குள் விபச்சார விடுதி, களியாட்ட விடுதி  ஆகியவற்றை  அமைப்பதை காட்டிலும் சிறந்த  திட்டங்களை வகுப்பது அவசியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். லண்டன். டுபாய், ஹொக்கொங் ஆகிய நாடுகளில் உள்ள  இவ்வாறான பொருளாதார வலயங்களின் சிறந்த திட்டங்களை கொழும்பு துறைமுக நகரத்திற்குள் கொண்டு வரும் யோசனைகளை முன்வைத்தார். அவரது யோசனைகள் சிறந்த முறையில் காணப்பட்டன.

கொழும்பு துறைமுக நகரம் 2019 ஆம் ஆண்டு  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.  இலங்கையின் நிலப்பரப்பில் புதிதாக இணைக்கப்பட்ட நிலப்பரப்பு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை  நில அளவையியல் திணைக்களத்தின் தேசிய  புத்தகத்தில் பதிக்கப்பட்டு இலங்கையின் புதிய வரைப்படம்  வெளியிடப்பட்டது. கொழும்பு துறைமுக நகரம்  இலங்கைக்கு முழுமையாக சொந்தம் என்ற வர்த்தமானி 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர அதிகாரங்களை  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கினார்.  துறைமுக நகரில் பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளை  தற்போதைய அரசாங்கம் இதுவரையில்  வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தவில்லை.

கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு சீன நிறுவனம்  முழுமையாக முதலீடு செய்துள்ளது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்  கொள்ள முடியாது. சீனாவிற்கு இணையாக இலங்கையும் மின்சாரம், திண்ம கழிவகற்றல் , குடிநீர் வசதி மற்றும் போக்குவரத்து ஆகிய  அடிப்படை தேவைகளுக்காக ஒரு பில்லியன் டொலர் நிதி முதலீடு செய்துள்ளது. 1.4 பில்லியன் டொலர் மாத்திரம் சீன நிறுவனம் இதுவரையில் முதலீடு செய்துள்ளது.

கொழும்பு துறைமுகநகர  நகரின் அபிவிருத்தி பணிகள் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுக்கப்படவில்லை.2025 ஆம் ஆண்டு அபிவிருத்தி பணிகளை முழுமையாக நிறைவு செய்யவே 2016 ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பாடசாலை, சர்வதேச தரப்பிலான வைத்தியசாலை, சர்வதேச தரத்திலான மண்டபம் ஆகியவை மாத்திரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இவை  இலங்கைக்கு சொந்தமானதாகும்.

கொழும்பு துறைமுக  நகரம் முழுமையாக இலங்கைக்கு சொந்தம் என்று செய்துக்  கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக பொருளாதார வலய சட்டமூலத்தில்  நீக்கப்பட்டுள்ளது.தனி ஒரு பிராந்தியத்தை தோற்றுவிக்கும் அம்சங்கள் மாத்திரம் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  இலங்கை சுயாதீன நாடு என அரசியலமைப்பின் 1 ஆவது அத்தியாயத்தின் ஏற்பாடுகளும்,  நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பில் அரசியலமைப்பின் 2 ஆவது அத்தியாயத்தின் ஏற்பாடுகளும், நாட்டுக்கான சட்டங்கள் பாராளுமன்றில் மாத்திரம் இயற்றப்பட வேண்டும் என்று அரசியலமமைப்பின் 76 ஆவது அத்தியாயத்தின் ஏற்பாடுகளும் முழுமையாக மீறப்பட்டுள்ளன.

கொழும்பு  துறைமுக நகரம் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கை பூகோள மட்டத்தில் பாதிக்கப்படும். இவ்விடயம் குறித்து நாட்டு மக்கள் தெளிவுப் பெற வேண்டும். நாட்டின் இறையாண்மையினை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது. மக்களின் எதிர்ப்பை முடக்க அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறது என்றார்.