பள்ளக்கட்டுவை'பருக்லேண்ட்'காணியில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உடன் இடைநிறுத்த எல்ல பிரதேச சபை முடிவு எடுத்துள்ளது. அத்துடன், இக்காணி குறித்த அனைத்து பிரச்சினைகளும், எல்ல பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தின்போது தீர்வு காணப்படல் வேண்டுமென்றும், எல்ல பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்ல பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று 22-04-2021ல் சபைத்தலைவர் பி.எம். உதயஜீவ பண்டாரவின் தலைமையில், சபை மண்டபத்தில் நடைபெற்றது. அவ்வேளையிலேயே, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட 'பரூக்லேண்ட்' காணி விடயம், எல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதையடுத்து, சபையின் உபதலைவர் ஈ.டி. பியதாச பேசுகையில், 'இக்காணி விவகாரம் தொடர்பாக எல்ல பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து, நிவர்த்தி செய்து கொள்ள முடியும்' என்றார்.

அதற்கு சபை உறுப்பினர் பி.சுரேஸ்கரன் பேசுகையில், 'ஏற்பட்டிருக்கும் இக்காணிப் பிரச்சினையினை, பொலிசாரினால் தீர்க்க முடியாது. அது விடயம் குறித்து, இச்சபையின் கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன் என்றார்.

51 ஏக்கர் கொண்ட இப் 'பரூக்லேண்ட்' காணியில் சிலர் நீண்டகாலமாகவே வசித்து வருகின்றனர். ஆனாலும் எவருமே இக்காணிக்கு உரிமை கோரவில்லை. அண்மைக்காலமாக வேறு சிலர் இக்காணியின் ஒரு பகுதியை தம் வசப்படுத்தியுள்ளனர்.  பணம் வழங்கி, இக் காணியைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

இக்காணியிலுள்ள மயான பூமி மற்றும் வணக்கஸ்தலம் ஆகியனவும் சுற்றிவலைக்கப்பட்டு, வேலி அமைக்கப்பட்டு, ஒருவரினால் உரிமை கோரப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது.