(எம்.எம்.சில்வெஸ்டர்)
சுப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரின் ரட்ணம் விளையாட்டுக்குக் கழகத்துக்கும் அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டியில் 1க்கு 1 என்ற கோல் கணக்கில்  சமநிலையில் நிறைவடைந்தது.

சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் 5 ஆவது போட்டி நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இரவு 7.15 மணிக்கு ஆரம்பமானது. இப்போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளாலும் கோல்போட எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் இரு அணிகளாலும் கோல் அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக  விளையாடினர். இம்முறை அப் கன்ட்றி லயன்ஸ் வீரர்கள் கோல் வலை நோக்கி அடித்த பந்துகளை ரட்ணம் கழக கோல்காப்பாளர் சமார்த்தியமாக தடுத்தார். இவர் தனது துல்லியமான கணிப்பு மற்றும்  உயரே பாய்ந்து கரங்களால் பந்தை தட்டியதால் ரட்ணம் அணிக்கெதிராக போடவிருந்த 3 கோல் வரையில் தடுத்திருந்தார்.

எனினும், போட்டியின் 59 ஆவது நிமிடத்தில் அப் கன்ட்றி லயன்ஸ்  வீரரான ஜ்மோ தலையால் முட்டி  அபாரமான ஒரு கோலைப் போட்டு தமது அணியை முன்னிலைப் பெறச் செய்தார். இதன் பின்னர் கோல் அடிக்க ரட்ணம் கழகம் பெரிதும் போராடியது. அவர்களின் போராட்டத்துக்கு பலனாக போட்டியின் 77 ஆவது நிமிடத்தில் அக்கில் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு  கோல் கணக்கை சமப்படுத்தினார்.

சீ ஹோக்ஸ் வெற்றி
இதேவேளை, புளு ஈகள்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சீ ஹோக்ஸ்  அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

கடந்த 20 ஆம் திகதியன்று நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியானது, மழை காரணமாக முதல் பாதியுடன் இடைநிறுத்தப்பட்ட போட்டி நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சீ ஹோக்ஸ் அணிக்கான வெற்றி கோலை அஸ்மீர் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.