சீன அரசு தனது ஆட்சிக்குட்பட்ட வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்கள் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து வருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'அவர்களின் பரம்பரையை அழிக்கவும் அவர்களின் வேர்களை அறுக்கவும்' உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்களை குறிவைத்து மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை சீனா செய்து வருகின்றது. 

சீன அரசாங்க ஆவணங்களிலிருந்து புதிதாக கிடைக்கக்கூடிய தரவுகள், ஜின்ஜியாங்கில் பெய்ஜிங்கின் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான பிற சான்றுகளாக அமைகின்றன. 

வெகுஜன தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் கலாசார துன்புறுத்தல் போன்ற பரவலான மற்றும் திட்டமிட்ட கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு சீனத் தலைமை பொறுப்புக் கூற வேண்டும்.

அது தொடர்பில் பொறுப்பானவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும், ஆட்சியாளர்களின் பொறுப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்துவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அத்துடன்  சீன அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கும் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கை தேவையாகவுள்ளது.

துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான பலவிதமான துஷ்பிரயோகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவ்விதமான துஷ்பிரயோகங்கள் மக்களுக்கு எதிரான ஒரு பரவலான மற்றும் திட்டமிட்ட தாக்குதலின் பகுதியாகவுள்ளது. 

அத்துடன் வெகுஜன தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல், வெகுஜன கண்காணிப்பு, கலாசார மற்றும் மத அழிப்பு, குடும்பங்களை பிரித்தல், கட்டாய வரி, வருவாய், கட்டாய உழைப்பு, பாலியல் வன்முறை மற்றும் இனப்பெருக்க உரிமை மீறல்கள் மறுக்கப்படுதல் உள்ளிட்ட சட்டவிரோத துஷ்பிரயோகங்கள் காணப்படுகின்றன. 

துருக்கிய முஸ்லிம்களை சீன அதிகாரிகள் திட்டமிட்டு துன்புறுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சீனவிற்கான பணிப்பாளர் சோஃபி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். 

'சீன அதிகாரிகள் துருக்கிய முஸ்லிம்களை துன்புறுத்தியுள்ளனர்.  அவர்களின் வாழ்க்கை, அவர்களின் மதம், கலாசாரம் ஆகியவற்றை மட்டுப்படுத்த முனைகின்றனர் என்று சோஃபி ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.  

ஆனால் பீஜிங்கானது இந்தச் செயற்பாடுகளை 'தொழிற்பயிற்சி' மற்றும் 'ஒழுங்குபடுத்தல்' ஆகியவற்றை வழங்குவதாகக் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் அந்த மக்களின்  சொல்லாட்சியை முடக்கும் மனிதக்குலத்திற்கு எதிரான கடுமையான குற்றங்களின் யதார்த்தத்தை மறைக்க முடியாது.

உய்குர்கள் மீதான நடவடிக்கைகள் காரணமாக சீனா உலகளவில் கண்டிக்கப்பட்டுள்ளது. 

பீஜிங் தனது முஸ்லிம் சிறுபான்மையினரை வெகுஜன தடுப்பு முகாம்களுக்குள் பலவந்தமாக மறு கல்வி அல்லது போதனைக்கு உட்படுத்த அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மறுபுறம், பீஜிங், சின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை முழுமையாக மறுத்துவிட்டது, அதேநேரத்தில் ஊடகவியலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள் கைதிகளிடமிருந்து சீனாவின் அடக்குமுறை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன, சமூகத்தின் மீதான கொடூரமான ஒடுக்குமுறையை எடுத்தக்காட்டி நிற்கின்றது.