(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)
நேற்று முன்தினம் பாராளுமன்ற சபாபீடத்தில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட  கைகலப்பு மற்றும் சபைக்கு வெளியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சியை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்க முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராய பாராளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, விசேட கூற்றொன்றை எழுப்பிய சபை முதல்வர் நேற்று சபையில் இடம்பெற்ற குழப்பகர செயற்பாடுகள் குறித்து விசேட விடயமொன்றை முன்வைத்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சியை  பாராளுமன்ற வளாகத்துக்குள் வைத்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்குவதற்கு முயற்சித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார். ஜனக திஸ்ஸகுட்டியாராச்சியை தாக்குதவதற்கு  முயற்சிக்கப்பட்ட  சம்பவத்தை பொலிஸார்  உள்ளிட்ட நேரில் பார்த்த பல சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இதுபோன்ற பாரதூரமான நிலைக்குப் பாராளுமன்றத்தைக் தள்ள வேண்டாமெனவும் தெரிவித்தார்.

எனவே இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த சபை முதல்வர்  தினேஸ் குணவர்தன, இந்த விசாரணைகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் நேற்று (21) பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட பல ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருள்கள், பாராளுமன்ற பாதுகாப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சபாநாயகரிடம் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, கடந்த காலத்தில் சபாநாயகர் நாற்காலியை உடைத்து சபைக்குள் தாக்குதல் நடத்தி, சபாநாயகரை தாக்க முயற்சித்து, பாதுகாப்பிற்கு நின்ற பொலிசாரை தாக்கியவர்கள் இன்று ஒழுக்கம் குறித்து பேசுவது வேடிக்கையானது. நாம் ஒருபோதும் எவரையும் தாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்றார். இதனை அடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் கருத்து தெரிவித்த சபாநாயகர், இன்றைய தினம் சபைக்கு உள்ளும், வெளியிலும் இடம்பெற்ற சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானதாகவும், அனைவரும் வெட்கப்பட வேண்டய விதத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான ஒழுக்கமற்ற செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ள அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் எனவும், நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் பாராளுமன்றதின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏழுபேர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவும் இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை நடத்தவும், அவர்கள் வழங்கும் அறிக்கைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார்.