முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன் எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலி செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

அங்கு, சிங்கள டயஸ்டபோராவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாடு 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருணாகலை வெலகெதர மைதானத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினரால் அழைப்புவிடுத்துள்ள நிலையில், அவரும் அவ்வழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு மாநாட்டில் தான் பங்கேற்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த அழைப்பிதழை, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனவிரத்ன மிரிஹானையில் உள்ள மஹிந்தவின் வீட்டுக்குச் சென்றே கையளித்திருந்தார். 

இந்நிலையிலேயே ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன் எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.