ஆண்டு தோறும் அமெரிக்கா சராசரி நூறு பில்லயன் டொலர் செலவு செய்து, இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆப்கான் போர் 2021 செப்டம்பர் 11 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

2400 அமெரிக்கப் படையினரைப் பலியெடுத்த இந்த போரில் அமெரிக்கா பதின்மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களைச் செய்துள்ளது. 

ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா அமைத்த தொலைதொடர்புக் கோபுரம் தேவைக்கு அதிகமான உயரமாக இருந்ததால் அது தமது நாட்டை உளவு பார்க்க அமைக்கப்பட்டிருக்கலாம் என ஐயப்பட்ட சோவியத் ஒன்றியம், தனது ஆட்சேபனையை தெரிவித்தது. அதை ஆப்கானிஸ்த்தான் அரசு ஏற்காததால் சோவியத் படையினர் ஆப்கானிஸ்த்தானை 1979இல் ஆக்கிரமித்தனர். 

மாணவர்கள் என்னும் தலிபான் 

சோவியத் படைகளுக்கு எதிராக போராடிய முஜாஹிதீன் அமைப்பினருக்கு அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகள் படைக்கலன்களும் பயிற்ச்சிகளும் வழங்கின. 

முஜாஹிதீனின் போராட்டத்தால் ஆப்கானிஸ்த்தானில் ஓர் அரசை அமைத்துவிட்டு சோவியத் படையினர் 1989இல் வெளியேறினர். 

முஜாஹிதீன் அமைப்பினரின் ஆட்சியில் அதிருப்தியுற்ற மாணவர்கள் தலிபான் என்னும் அமைப்பை உருவாக்கி முஜாஹிதீன் அமைப்பிற்கு எதிராக போராடினர். தலிபான் என்பதன் பொருளே மாணவர்கள் என்பதாகும். 

முதலில் ஒரு மாகாணத்தைக் கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் 1996இல் ஆப்கானிஸ்த்தானில் தமது ஆட்சியை நிறுவினர். 

தலிபான்களின் ஆட்சியை சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் அங்கீகரித்திருந்தன. அவர்களது ஆட்சி இஸ்லாமியச் சட்டங்களுக்கு ஏற்ப நடந்தது. 

முஜாகிதீன் அமைப்பின் ஆட்சியில் இருந்த ஊழலையும் பாதுகாப்பற்ற நிலையையும் தலிபான்கள் இல்லாமற் செய்தனர். இஸ்லாமியச் சட்டப்படி ஆட்சி செய்த தலிபான்கள் திருடர்களின் கைகளை வெட்டுதல், முறை தவறி உறவு கொள்வோரை பொது இடத்தில் தலையை வெட்டுதல், பெண்களின் சுதந்திரத்தை இல்லாமற் செய்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தினர். 

தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டன. பாகிஸ்த்தானின் சில பிரதேசங்களிலும் தலிபான்களின் ஆதிக்கம் இருந்தது.

நட்பால் வந்த வினை 

ஆப்கானிஸ்த்தானின் விடுதலைக்குப் போராடிய பல இயக்கங்களுள் அல் கொய்தா அமைப்பும் ஒன்றாகும். 

1988 பாகிஸ்த்தானின் பெஷவார் நகரில் பின் லாடனால் ஆரம்பிக்கப்பட்ட அல் கொய்தா அமைப்பின் கொள்கைகளில் அமெரிக்காவை அழித்தால் மட்டுமே உலகில் இஸ்லாமிய அரசுகளின் ஆட்சியை நிறுவ முடியும் என்ற கொள்கை முக்கியமானதாகும். 

தலிபான் அமைப்புடன் நல்லுறவைப் பேணிய அல் கொய்தா அமைப்பு 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் செய்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அல் கெய்தாவை அழிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினர் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தனர். 

கால அவகாசம் கேட்டுக் கொண்டிருந்த படையினர் 

2011ஆம் ஆண்டு பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோப்படையினர் விலக்கப்படுவதை விரும்பினார். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கப் படையினர் கால அவகாசம் கேட்டனர். 

அவரின் பின்னர் ஜனாதிபதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்த்தானில் இருந்து படையினர் வெளியேற்றப்படுவதை பெரிதும் வலியுறுத்தினார். அவரிடமும் அமெரிக்கப்படையினர் கால அவகாசம் கேட்டனர். 

2021 ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்ற ஜோ பைடனிடமும் படையினர் கால அவகாசம் கேட்டனர். ஆப்கானிஸ்த்தான் தொடர்பாக அமெரிக்கப் படையினரின் கருத்துக்களை அமெரிக்கப் பாராளுமன்றத்தின் மூதவை உறுப்பினராகவும், துணை ஜனாதிபதியாவும் பல நூறு தடவை செவி மெடுத்த ஜோ பைடன் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேற வேண்டும் என உறுதியான முடிவு எடுத்துள்ளார். 

2001ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் மூதவைக்கு வந்தபோது ஆதரித்து வாக்களித்தவர் ஜோ பைடன்.

மூன்று ரில்லியன் டொலர் கனிம வளங்கள் 

சோவியத் படையினர் ஆப்கானிஸ்த்தானில் இருந்தபோது அங்கு பெருமளவு கனிம வளங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் வெளியேறும் போது விட்டுச் சென்ற கனிம வளங்கள் தொடர்பான ஆவணங்கள் அமெரிக்கர்கள் கையில் அகப்பட்டன. 

அமெரிக்கர்கள் தொடர்ந்துசெய்த ஆய்விகளின் படி மூன்று ரில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்கள் ஆப்கானிஸ்த்தானில் இருக்கின்றன. 

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செப்பு, இரும்பு, குறோமைட், ரண்டலம், யூரேனியம், லித்தியம், அல்மினியம் என பலத்தரப்பட்ட கனிம வளங்கள் ஆப்கானிஸ்த்தானில் உள்ளன. 

பல்தேசிய நிறுவனங்கள் ஓர் அரசிடமிருந்து கனிம வளங்களை வாங்கும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதையே ஒரு போராளி அமைப்பிடமிருந்து வாங்கும்போது விற்பனை வரியற்ற விலையைக் கொடுக்கலாம். 

அத்துடன் அவர்களுக்கு அவசியம் தேவைப்படும் படைக்கலன்களைக் கொடுத்து பண்டமாற்றாக மிக மலிவாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

ஆப்கானிஸ்த்தான் போர் இருபது ஆண்டுகள் இழுபடுவதற்கு இதுவே முக்கிய காரணம். அத்துடன் ஆப்கானிஸ்த்தானில் உள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களையும் ஒழிக்க வேண்டும் என்பதாலும் அமெரிக்கப் படையினர் அங்கு தங்குவதற்கு விரும்புகின்றனர். 

மேலும் ஆப்கானிஸ்த்தான், அமெரிக்கப் படையினருக்கு சிறந்த பயிற்ச்சிக் களமும் புதிய கருவிகளையும் படைக்கலன்களையும் பரிசோதித்து பார்க்கும் களமுமாகும். 

அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் நிலை என்ன?

தற்போது ஆப்கானிஸ்த்தான் தலைநகர் காபூலில் இருந்து ஆட்சி செய்யும் அதிபர் அஷ்ரஃப் கானி அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினர் வெளியேறிய பின்னர் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க மாட்டார் எனக் கருதப்படுகின்றது. 

நேட்டோப்படையினரின் வெளியேற்றம் ஒரு நிபந்தனையற்ற வெளியேற்றமாகும். அமெரிக்காவின் 54 தனியார் படை நிறுவனங்கள் ஆப்கானிஸ்த்தானில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன. 

தனியார் படை என்னும் கௌரவப் பெயருள் மறைந்திருக்கும் கூலிப்படையினர் அஷ்ரஃப் கானியின் ஆட்சியைத் தக்க வைக்க முயலுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. 

ஏற்கனவே ஆப்கானிஸ்த்தானில் ஆயிரக்கணக்கான தனியார் படையினர் இருக்கின்றனர். அஷ்ரஃப் கானியிடம் ஒரு விமானப்படை இல்லை. கைதேர்ந்த கரந்தடிப் படையினரைக் கொண்ட தலிபான் அமைப்பை விமானப்படை இல்லாமல் சமாளிக்க முடியாது. ஏற்கனவே அரைவாசிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தலிபான்களின் கைகளில் உள்ளது. 

அயல் நாடுகளும் தலிபான்களும்

மீண்டும் ஓர் உள்நாட்டு போர் ஆப்கானிஸ்த்தானில் உருவாகலாம். தலிபான் ஆப்கானிஸ்த்தானின் அயல்நாடுகளுடன் அமைதியாக இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. 

பாக்கிஸ்த்தானில் தலிபான்கள் செய்த தீவிரவாத தாக்குதல்களாலும் தலிபான்களை அழிக்க அமெரிக்காவிற்கு பாக்கிஸ்த்தான் உதவி செய்ததாலும் தலிபான்களுக்கும் பாகிஸ்த்தானுக்கும் நல்ல உறவு இல்லை. 

முழு ஆப்கானிஸ்த்தானையும் தலிபான்களுக்கு கையளிக்கக்கூடாது என்கின்றது பாக்கிஸ்த்தான். மத்திய ஆசியாவில் தமது ஆதிக்கத்தை செலுத்த ஈரானும் துருக்கியும் முயல்கின்றன. அதற்கு ஆப்கானிஸ்த்தான் சிறந்த தளமாகும். 

தற்போது அறுபது விழுக்காட்டிற்கு மேலான பெண்கள் ஆப்கானிஸ்த்தானில் கல்வி கற்கின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. ஏற்கனவே பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.