அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த மாகியா பிரையன்ட் என்கிற 16 வயது கருப்பின சிறுமி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கறுப்பின சிறுமி மீது பொலிஸார் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்கிற உண்மை வெளிவரவில்லையென  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விரிவான  விசாரணைக்கு பிறகு உண்மை என்ன என்பது தெரியவரும் என கொலம்பஸ் நகர மேயர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம்  மே மாதம் ஜோர்ஜ் பிளாய்ட் என்கிற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் தனது முளங்கால் முட்டியை வைத்து அழுத்தி, மூச்சுத் திணறடித்து கொலை செய்த வழக்கில், குறித்த பொலிஸ் அதிகாரி குற்றவாளி என கூறி நீதிமன்றம்  தீர்ப்பளித்த சில மணிநேரத்திற்குள்ளாக கருப்பின சிறுமி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 இதனிடையே கருப்பின சிறுமியை பொலிசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து கொலம்பஸ் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. அந்த நகரில் உள்ள பொலிஸ் தலைமையகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில்  ஈடுபடுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.