(ஆர்.யசி, எம்.ஆர் .எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக  குரல் எழுப்பிவரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் ஆண்டகையின் குரலை  உயர்த்த வேண்டும். ஆனால்  யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில்  தெரிவித்தார்.

 தமிழ் இளைஞர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுமளவுக்கு நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைதுகள் தலைத்தூக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கையொன்றை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையின் பிரகாரம் நேற்று காலையில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக நாமும் சபையில் அஞ்சலி செலுத்துகிறோம்.

தமிழர்கள் இந்த மண்ணில் கடந்த 70 ஆண்டுகளாக கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு இறுதிமுதல் 2009 மே 18 வரை இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்டனர். 

ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் நான்கு  இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் முடங்கியிருந்த நிலையில் 75ஆயிரம் பேருக்கு மாத்திரமே உணவு அனுப்பப்பட்டது. 

உணவில்லாமல்கூட பலர் உயிரிழந்தனர். கஞ்சிக்காகவும் சோற்றுக்காகவும் வரிசையில் நின்ற பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஐ.நாவின் அங்கத்துவ நிறுவனங்கள் இலங்கையில் இருக்கவிடாது கலைக்கப்பட்டன.

இவ்வாறு பாரிய அநியாயங்கள் இடம்பெற்ற போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக மட்டுமல்ல யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் ஆண்டகையின் குரலை உயர்த்த வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக இன்றும்கூட பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நீர்வேலி, கோப்பாய், கள்ளியங்காடு போன்று பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பல இளைஞர்கள் ஒரே இரவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றனர் என்றும் எவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரியாதுள்ளது.

 பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக  ஊடாக அடக்கு முறையும் மலிந்துப் போயுள்ளது. ஊடக சுதந்திரம் இல்லாத நாடாக இலங்கை மாறிக்கொண்டுள்ளது. ஊடகவியலாளர்கள் எவரும் தொடர்புகளை வைத்திருந்தால் அவர்கள் நான்காம் மாடிக்கு அழைக்கப்படுகின்றனர். கடந்த மார்ச்  29ஆம் திகதியுடன்  தொலைக்காட்சியின் தொகுப்பாளரும் செய்தியாளருமான குலேந்திரன் சுலக்ஷன் என்பவர் வெளிநாட்டில் உள்ள தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினருடன் தொடர்பில் இருக்கிறாரென பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல இளைஞர்கள் காரணமின்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கிளிநொச்சியின் உள்ள ஆசிரியர் சிவேந்திரன் என்பவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,  என்னை பற்றியும் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். இளைஞர்கள் வாழ முடியாத நிலைக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் தலைத்தூக்கியுள்ளது. தமிழர்களை குறி வைத்துதான் இந்தச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. 12 பேர் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யாது ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஜனநாயகம் நியாயமற்ற விதத்தில் செல்கிறது. வன்முறை ரீதியாகவே அரசாங்கம் சிந்திக்கிறது.

காலிமுகத்திடலில் அகிம்சை வழியில் போராடிய இளைஞர்கள் மீது குண்டாம்தடி தாக்குதலை பொலிஸார் தாக்கியதால்தான் ஆயுதப் போராட்டம் வெடித்தது. இதுவொரு சிங்கள வன்முறைக்கான பாராளுமன்றமா? வன்முறை களமாக பாராளுமன்றத்தை சிங்களத் தலைவர்கள் பாவிப்பதால்தான் தமிழர்களுக்கு நீதி கிடைக்காதுள்ளது. சிங்கள மக்கள் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றார்.