இலங்கை கடற்படை முதலாம் முறையாக ஒரு நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை ஹம்பேகமுவை பகுதி பொதுமக்களின் பாவனைக்காக கையளித்துள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அமைக்கப்பட்ட இவ்வியந்திரம் ஹம்பேகமுவை பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 3000 பேரின் தினசரி குடிநீர் தேவையை பூர்த்திசெய்யவுள்ளது.

ஆறுகள் மற்றும் குளங்களிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்த பின் அதனை மக்களுக்கு விநியோகிக்க கூடிய தன்மை இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்திற்குள்ளது. 

மேலும் இது 10,000 லீற்றர் நீரை சுத்திகரித்து ஹம்பெகமுவை பிரதேச மக்களின் அன்றாட குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும். 

தென்கிழக்கு கடற்படை கட்டளை பிரதேச தலைமையகத்தினால் இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசத்தில் கடற்படை தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய மேலும் 5 நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெரும் வாய்ப்பு கிட்டும். 

இதேவேளை, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு சூரிய சக்தி இயந்திரம் ஒன்றையும் கடல் நீரை சுத்தப்படுத்தும் உவர் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.