(நா.தனுஜா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கடந்த காலத்தில் மகாசங்கத்தேரர்கள் பாரிய ஆதரவை வழங்கியிருந்தார்கள். எனினும் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, பெரும் பாதகச்செயலுக்கு ஆதரவு வழங்கியிருப்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய  அரசாங்கம்  கொழும்பு துறைமுக நகரத்திற்குரிய இடத்தின் உரிமையை சீனாவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், அந்த இடத்தை இலங்கைக்கு சொந்தமாக்கிக்கொள்வதற்கும் அதற்குப் பதிலாக அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சீனாவிற்கு 99 வருடகால குத்தகைக்கு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதுமாத்திரமன்றி துறைமுக நகரப்பகுதி இலங்கை வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டதுடன் கொழும்பு நிர்வாக மாவட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

எனினும் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கடந்த காலங்களில் எம்மீது குற்றஞ்சாட்டி வந்த ராஜபக்ஷ அரசாங்கமே தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்குகின்றது என்பது அதன் தற்போதைய நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஹொங்கொங்கின் உரிமையைப் பெற்றுக்கொண்ட சீனாவே தற்போது அதனை நிர்வகிக்கின்றது. இந்த நிலையே துறைமுக நகரத்திலும் ஏற்படப்போகின்றது. ஒரு நாடு, இரண்டு சட்டங்கள் என்ற நிலையுருவாகப்போகின்றது என்றார்.