வீ.பிரியதர்சன்

வெடி குண்டுகளின் பேரிரச்சல்களுக்கும்  துப்பாக்கிகளின் வேட்டுச் சத்தங்களுக்கு ஒய்வு கொடுத்து 30 ஆண்டுகால போர் நிறைவடைந்துள்ளது. நீண்ட போராட்ட வரலாற்றின் பின்னர்  இலங்கை மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசக்குழாயினை நெரித்தது போன்று உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்றது.

ஈழப்போர் முடிவுற்று 10 ஆவது ஆண்டில், அதாவது 2019 ஏப்ரல் 21இல்  இடம்பெற்ற  இந்த அடிப்படைவாத தொடர் தற்கொலை தாக்குதல்களின் தாக்கம் 2 வருடங்கள் கடந்தும் வலி சுமந்த சுவடுகள் மக்கள் மனங்களை விட்டு அகலவில்லை.

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் அன்றையதினம் இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கையிலும் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறுதினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், ஆலயங்களில் அவலக்குரல்களும் இரத்த வெள்ளத்தில் சிதைந்து கிடந்த மனித உடல்களும் உயிருக்காக துடிதுடித்துக்கொண்டிருந்த மனித உயிர்களின் போராட்டங்களும் இன்று எம் கண்முன் வந்துசெல்கின்றன.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் எவருமே நினையாத நேரத்தில் நாட்டை உலுக்கிய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாளை எவரும் எளிதில் மறந்து விடமுடியாது.

இலங்கையின் கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் 8 தொடர் தற்கொலை குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

பயங்கரவாதி சஹ்ரான் குழுவினரால் மிலேச்சத்தனமாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள்  நிறைவடைகின்றபோதும், ஏற்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கரும்புள்ளியாகவே காணப்படுகின்றதுடன் நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் இழுத்தடிப்பு நிலையிலேயே உள்ளது.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்தலம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வாப்­பிட்டி - புனித செபஸ்­டியன் ஆ­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சீயோன் தேவா­லயம் ஆகி­யன  தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இவற்றைவிட கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

இந்த ஆறு தாக்­கு­தல்­களும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி  காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட நேர இடை­வெ­ளி­யி­ல் நடத்தப்பட்டன.

அன்றையதினம் பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக  உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும்  சாதாரண தங்குமிட விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம்  பதி­வா­னது.

அதனைத் தொடர்ந்து பிற்­பகல்  2.15 மணி­ய­ளவில், தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால்  தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இதில்  27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர். 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

இத் தாக்குதல்களில் பலர் இன்றும் ஊனத்துடனும் ஆறாதவடுக்களுடனும் தங்களுக்குள் பல கவலைகளை மறைத்துக்கொண்டு வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். சில குடும்பங்கள் முற்றாக இந்த தாக்குதலுக்கு இரையாகியுள்ளன.

பலர் தாய், தந்தை, தங்கை,  அண்ணன், தம்பி என உடன் பிறப்புக்களை இழந்து  அநாதைகளாக்கப்பட்டு அங்கலாய்க்கின்றனர். இவர்களுக்கு உதவுவார் யாரும் இல்லை. ஆதரிப்பார் எவரும் இல்லை. அரசாங்கமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த வேதனைகளும் வலிகளையும் ஏற்படுத்திய சம்பவம் நடைபெற்று இன்றுடன் 2 வருடங்களாகியும் சரியான விசாரணைப் பொறிமுறையின்றி தமக்கு ஏற்றாற்போல் நியாயம் கற்பிக்கப்படும் நிலைக்கு இன்று சென்றுவிட்டது.

தற்கொலைத் தாக்குதலுக்கு நியாயம் கோரி நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவும் தனது விசாரணைகளை ஒரு வருடமாக  முன்னெடுத்த நிலையில், அதன் விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த விசாரணை அறிக்கையை ஆராய்வதற்கும் ஒரு குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. எனினும் அது பல அழுத்தங்களுக்கு பின்னர் கைவிடப்பட்டது.

ஆனால் இன்று வரை பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதிலிருந்து தப்பித்து வருகின்றார்கள். பலியானது என்னவோ அப்பாவிகள் தானே என்று கருதி கைவிட்ட நிலையிலும், தற்போது உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுக்கு ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய வகையில் ஒவ்வொரு புதிய காரணங்களையும் நீதிகளையும் கூறிவருகின்றனர்.

ஆனால் இதற்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும். நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேட எத்தணிக்கக் கூடாது.

தற்போது தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் 2 வருடமாகியும் சம்பவம் தொடர்பில் பலரை கைதுசெய்தும் அதேவேளை, தற்போதும் கைதுசெய்தும் வருகின்றனர்.

எவ்வாறாயினும்  கைது செய்யப்பட்டோரில் சிலரை விடுவித்தும் மேலும் சிலரை தற்போது வரை தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர்.

எது எவ்வாறு இருந்தாலும் ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்று இன்றுடன் 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தமக்கு நினைத்தாற்போல் விசாரணை ஆணைக்குழுவையும், விசாரணை மேற்கொள்ளும் பொறிமுறைகளையும், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளையும், மாற்றியமைத்தும் அவர்களுக்கு விரும்பியவாறு செயற்படும் நிலையே கடந்த கால இலங்கையின் வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அந்த வகையில் தற்போது உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கான நீதியும் இவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு இறுதியில் மதத் தலைவர்கள் நீதி விசாரணைகளில் தலையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து சஹ்ரான்தான் உயிர்த்த ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி தான் பிரதான சூத்திரதாரியென தெரிவிக்கின்றது.

அதனைவிட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என கடந்த 2 வருடங்களாக மக்களை பெறுமை காக்குமாறு அமைதிப்படுத்தி அவர்களை எவ்வித வன்முறைகளையும் கையாளாதவாறு தடுத்து, நாட்டில் வன்முறை ஏற்படாதவாறு பாதுகாத்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், தற்போது பொறுமையிழந்து நீதிக்காக தனது வாயை திறந்துள்ள நிலையில், இப்பொழுது அவர் மீதும் அரசியல் சாயம் பூசப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி திசை திருப்பப்படுகின்றது.

கடந்த 2 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் வலிகள் வேதனைகளோடு வாழ்க்கையை கடத்தினாலும் இதுபோன்ற மற்றுமொரு சம்பவம் எதிர்காலத்திலும் நடைபெறாமல் இருப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று நினைத்து, கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் அரசாங்கத்தை மாற்றினர்.

தற்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் நாம் ஆட்சிக்கு வந்தால் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதலுக்கு நீதியைப்பெற்றுத் தருவோமென கூறி மக்களின் ஆணையை பெற்றது. 

ஆனால், நடைபெறுவது என்னவென்றே ஊகிக்க முடியாத அளவில் நீதி வழங்கும் நடடிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டும் நோக்குடன் கடந்த 2019 ஆம் திகதி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார். 

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட 37 ஆயிரத்து 314 பக்கங்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு அறிக்கையின் தரவின்படி 1, 588 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 457 பேர் சாட்சியமளித்துள்ளனர்.  சுமார் 214 நாட்கள் விசாரணைகள் இடம்பெற்றன.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இலங்கையில் 11 முஸ்லிம் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்முறை இலங்கையின் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதி கிடைக்காவிடில் நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்படுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் சஹ்ரானின் மடிக்கணினி காணமால் போயுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கம் தனது இறுதி ஆறுமாத காலத்தில் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாட்சியங்கள் அனைத்தையும் அழித்துள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பார் என்றால் அவரை நிச்சயமாக கண்டறிய நடவடிக்கை எடுப்போம் எனவும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பல குறைகள்  காணப்படுகின்றன. சில விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவில்லை. 

ஆகவே, மீண்டும் விசாரணையை நடத்துவதுற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கத்தோலிக்க மக்கள் அமைப்புக்களின் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு இரு வாரங்களுக்குள் நீதியைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. 

எனவே, வெளிநாட்டு விசாரணை குழுக்களையேனும் நாட்டுக்கு அழைத்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குண்டு தாக்குதல்கள் தொடர்பான உண்மையான பின்னணியை வெளிப்படுத்துவது தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்படுவது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இதன் பிரதான சூத்திரதாரிகள் யார்? எதற்காக யாருடைய தேவைக்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்துவதில் குற்ற விசாரணைப் பிரிவும் , அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளன.

எந்தவொரு தவறும் இழைக்காத 269 அப்பாவி மக்களின் உயிர் போகக் காரணமானவர்களை வெளிப்படுத்துவதில் அரசியல் நோக்கங்களால் அரசாங்கம் பின்வாங்குகின்றமை கவலையளிக்கிறது.

இந்த தாக்குதல்களின் பின்னணியின் பெரும்பாலும் அரசியல் சக்திகள் காணப்படுகின்றமை சகலரும் அறிந்த விடயமாகும். 

எனவே தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு  இன்று  கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான நீதியை வழங்க 2 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் இலாபம் இன்றி மேலும் காலங்கடத்தாது சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மேலும் காலத்தை இழுத்தடிக்காது நீதியை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த  விரும்புகின்றோம்.