அமெரிக்காவின், பல்டிமோர் நகரில் அமைந்துள்ள டோமினோ சர்க்கரை தொழிற்சாலையில் செவ்வய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் தனது 120 ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடிய பின்னர் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழிற்சாலையில் மிகப்பெரிய சேமிப்பு கொட்டகையின் கூரைப் பகுதி இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட மின்சாரக் கசிவினால் இந்த அனர்த்தம் சம்பவித்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள போதிலும், தொழிற்சாலையின் உரிமையாளர் விபத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

விபத்தினையடுத்து அனைத்து தொழிற்சாலை ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், காயங்கள் மற்றும் உயிரழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்பதை தீயணைப்பு பிரிவினர் உறுதிசெய்துள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி செவ்வாய் பிற்பகல் 3 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 

99 ஆண்டு பழமையான இந்த தொழிற்சாலை பல தசாப்தங்களாக பால்டிமோர் உள் துறைமுக நீர்முனையில் ஒரு தனித்துவமான தளமாக இருந்து வருகிறது.