சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்துக்காக 4 நிமிடங்கள் ஓடும் மியூசிக் வீடியோ, ‘யூ டியூப்’பில் வெளியிடப்பட்டது.

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து இருக்கும் புதிய படம், ‘ரெமோ’. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் சதீஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல்-நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்துக்காக, 4 நிமிடங்கள் ஓடும் ‘மியூசிக் வீடியோ’ படம் யூ டியூப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் பின்னணி பாடகர் - பாடகிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக பட அதிபர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார். ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அரசு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை வெளியிட ஒக்டோபர் 7 ஆம் திகதியை தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார்.