- எம்.டி.லூசியஸ்
அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது.
ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன.

யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும்.
பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன.
இன்றுடன் 2 வருடங்கள் நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கறுப்பு புள்ளியாக சுமந்து நிற்கின்றது.
40 நாட்கள் ஆண்டவரின் மரணப்பாடுகளை விசுவாசித்து, நோன்பிருந்து மானிட மகனின் உயிர்ப்பை கொண்டாட தயாராக இருந்த கிறிஸ்தவர்களுக்கு அன்று கண்ணீரும் கவலையும் மாத்திரமே மிஞ்சின.
மானிட குலம் செய்த தவறுக்கு தன்னை தியாகம் செய்த நல்லாயனின் உயிர்ப்பு நாளில் பலர் பலியாகுவார்கள் என யாரும் கடுகளவு கூட எண்ணியிருக்க மாட்டார்கள்.

அதுவும் ஆண்டவரின் இல்லத்தினுள் இவ்வாறு மிருகத்தனமாக தாக்குதல் முன்னெடுக்கப்படும் என கனவில் கூட யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
யேசுக் கிறிஸ்து அன்று சிலுவையில் தனது உயிரை விடுவதற்கு முன்னர் 'எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறிய மனதை நெகிழ வைக்கும் வார்த்தைகளே அன்று ஆலயத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான போதும் இதயத்தையே வெடிக்கச் செய்து விட்டது.
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாப்பிட்டி - புனித செபஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இந்த ஆறு தாக்குதல்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட நேர இடைவெளியில் நடத்தப்பட்டன.
அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் காவுகொள்ளப்பட்டனர். இதில் 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

குறிப்பாக ஆலயங்களில் 8.45 மணிக்கு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன. இந் தாக்குதல்களில் பலர் இன்றும் ஊனத்துடன் ஆறாவடுக்களை கொண்டு காணப்படுகின்றனர். சில குடும்பங்கள் முற்றாக இந்த தாக்குதலுக்கு இரையாகி இருந்தன.
பலர் தனது அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், தம்பி என உடன் பிறப்புக்களை இழந்து உதவியற்ற அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவுவார் யாரும் இல்லை. ஆதரிப்பார் எவரும் இல்லை. அரசாங்கமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த வேதனைகளும் வலிகளையும் ஏற்படுத்திய சம்பவம் நடைபெற்று 2 வருடங்களாகியும். குறிப்பாக இந்த தாக்குதல்களை அன்று தடுத்திருக்கலாம்.

சுமார் 20 நாட்களுக்கு முன்னரே தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதும் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தி விட்டது. அரசாங்கத்தின் அலட்சியமே அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கு பிரதான காரணமாகும்.
ஆனால் இன்றுவரை அன்று இருந்த அரசாங்க தரப்பில் பொறுப்புகூற வேண்டியவர்கள் அதிலிருந்து தப்பித்து வருகின்றார்கள். பலியானது என்னவோ அப்பாவிகள் தானே என்று எண்ணிவிட்டார்கள் போலும்.
ஆனால் இதற்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும். நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேட எத்தணிக்க கூடாது.

அதேபோன்று பயங்கரவாதி சஹ்ரானின் செயற்பாட்டை வைத்து அவரை சார்ந்த சமூகத்தையும் சிலரின் அரசியல் சுய இலாபங்களுக்காக பலிக்கடாவாக்க கூடாது.
தற்போது அந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் இதுவரை 197 பேரைக் கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட 197 பேரில் 90 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
' இஸ்லாம் மதத்தை தவறாக விளக்கப்படுத்தி, அதன்பால் முஸ்லிம் சமூக இளைஞர்களை ஈர்த்து, தீவிரவதம் போதிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என பொலிஸார் அண்மையில் கூறியிருந்தனர்.

எது எவ்வாறு இருந்து இருந்தாலும் ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்று 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

காலத்தின் சக்கரத்தில் வலிகள் வேதனைகளோடு மக்கள் வாழ்க்கையை கடத்தினாலும் இதுபோன்ற மற்றுமொரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண வேண்டும்.

மேலும் இவ்விடத்தில் அரசியல் இலாபம் இன்றி சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி கூற விரும்புகின்றோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM