ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். தொடரின் 13 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், டிகொக்கும் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய 3 ஆவது ஓவரின் முதல் பந்தில் டிகொக் 2 ஓட்டங்களுடன் விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்திடம் பிடிகொடுத்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளை எதிர்கொண்டு, 4 பவுண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அரைசதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மாவும் 44 ஓட்டங்களுடன் அமித் மிஷ்ராவின் பந்து வீச்சில் பிடிகொடுத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய நடுத்தர வரிசை வீரர்களான ஹர்திக் பாண்டியா(0), குருணல் பாண்டியா (1), பொல்லார்ட்(2) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், அணியின் ஓட்ட வேகம் வெகுவாக குறைந்தது. 

இதனிடையே சற்று நேரம் தாக்குப் பிடித்தாடிய இஷான் கிஷனும் 26 ஓட்டங்களில் போல்ட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.

138 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். 

ப்ரித்வீஷா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட சேகரிப்பில் ஈடுபட்டது. 

எனினும் தவான் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 45 ஓட்டம் எடுத்த நிலையில் ராகுல் சஹாரின் பந்து வீச்சில் குருணல் பாண்டியாவிடம் பிடிகொடுத்தார்.

தொடர்ந்து பொல்லார்ட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 33 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்தும் 7 ஓட்டங்களில் வெளியேறினார்.

பின்னர் ஆட்டம் மெதுவாக மும்பை அணிக்கு சாதகமாக திரும்பியது. ஆனால் இறுதி ஓவர்களில் லலித் யாதவ்-சிம்ரன் ஹெட்மேயர் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றி, டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்று தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அமித் மிஷ்ரா தெரிவானார்.