(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகரத்திற்கு எதிராக சர்வதேச அளவில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு  தேசிய மட்டத்தில் ஒரு சிலர்  ஆதரவாக செயற்படுகிறார்கள் அரசியலமைப்பிற்கு முரணாக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது.

பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின்  சர்வதேச  முதலீட்டாளர்களுக்கு  வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் உள்ளடக்கபப்டுள்ளது என மதுர விதானகே தெரிவித்தார்.

Articles Tagged Under: மதுர விதானகே | Virakesari.lk

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர் தரப்பினரும், ஆளும் தரப்பினர் ஒரு சிலரும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக  பயன்படுத்திக் கொள்கிறார்கள். துறைமுக நகர நடவடிக்கைகள் இதுவரையில் சிறந்த முறையில்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். 

தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளை  பின்பற்றும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்க் கொள்கிறார்கள். இதன் காரணமாகவே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு  ஸ்தாபிப்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்திற்கு எதிரா கசர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  துறைமுக நகரம்  நாணய சுத்திகரிப்பு மத்திய நிலையமாக மாற்றம் பெறும் என அமெரிக்காவிற்கான  இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியலமைப்பிற்கு முரணாக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  கொழும்பு துறைமுக நகர பொருளாதார  ஆணைக்குழு சட்டமூலம் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.. இச்சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம் என்றார்.