யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றிரவும் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சுன்னாகம் சபாபதிபிள்ளை முகாமிற்கு அண்மையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபாபதிபிள்ளை முகாம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் அயல் கிராம இளைஞர்களுக்குமிடையில் ஏற்கனவே மோதல் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று சபாபதிபிள்ளை முகாம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்  மீது வாள் வெட்டுதாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை யாழ்.சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் இரவும் சங்குவேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அக் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

 தொடர்ச்சியான இச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.