(எம்.மனோசித்ரா)
கொலை, ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை அரசியல் பழிவாங்கல் எனக் குறிப்பிட்டு சட்டமா அதிபர், நீதிபதிகள், விசாரணைகளை முன்னெடுத்த ஏனைய அதிகாரிகளை தவறிழைத்தவர்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகிறது. இதன் மூலம் நாட்டின் சட்ட கட்டமைப்பு, ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் சட்டத்துறை உள்ளிட்ட பல துறைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை வழக்கு விசாரணைகளிலிருந்து விடுவிக்க முயற்சிக்கின்றனர்.

அத்தோடு அரசாங்கத்தை விமர்சிக்கின்ற பிரபல எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசியலிலிருந்து நீக்குவதற்காக அவர்களின் குடியுரிமையை நீக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஜனநாயக விரோத பாதையிலேயே அரசாங்கம் பயணிக்கிறது.

கொலை , ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை அரசியல் பழிவாங்கல் எனக் குறிப்பிட்டு சட்டமா அதிபர், நீதிபதிகள், விசாரணைகளை முன்னெடுத்த ஏனைய அதிகாரிகளை தவறிழைத்தவர்களாக்க முற்படுகின்றார்கள்.

ஜனநாயக நாடுகள் பட்டியலில் 2017 இல் 62 ஆம் இடத்தை பிடித்திருந்த எமது நாடு தற்போது 68 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக அரசாங்கம் எந்தளவிற்கு ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகிறது என்பது தெளிவாகிறது. சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பலர் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் சட்ட கட்டமைப்பு, ஜனநாயகம் என்பன சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள. இந்த நிலையில் நாட்டு மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.