ஊழல் குற்றச்சாட்டுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் தில்ஹாரா லொகுஹெட்டிகேவுக்கு ஐ.சி.சி.யினால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்குகொள்ள எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியமும் (ஈ.சி.பி.) அவர் மீது குற்றம் சாட்டிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 2019 ஏப்ரலில் லோகுஹெட்டிகே ஐ.சி.சி.யின் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். 

இந்த குற்றச்சாட்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2017 ஆம் ஆண்டு விளையாடிய டி-10 போட்டியுடன் தொடர்புடையது, அதனால்தான் ஈ.சி.பி முதலில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இந் நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் லொகுஹெட்டிகே குற்றவாளி என்று ஐ.சி.சி. ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கண்டறிந்தது.

இலங்கைக்காக 11 வெள்ளை பந்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர், எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 101 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இறுதியாக அவர் 2016 பெப்ரவரி இல் மூர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கான முதல் தர போட்டிகளில் பங்குகொண்டார்.

தற்சமயம் லொகுஹெட்டிகே அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதுடன் இலங்கை கிரிக்கெட்டில் அவர் எந்த பதவிகளையும் வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.