இந்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு (கோப் குழு) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நான்கு நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் எதிர்வரும் 22 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பதுடன், 23 ஆம் திகதி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் அழைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முத்துராஜவல சதுப்பு நிலம் தொடர்பில் ஆராய்வதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்க கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது. 

வரி செலுத்துனர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வரிகள் மற்றும் தண்டப் பணங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இறைவரித் திணைக்களம் 23ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக விசேட தேவைக்காக இறக்குமதிசெய்யப்பட்ட வாகனங்களை இரட்டைத் தேவைக்கான வாகனங்களாகப் பாதிவுசெய்வது மற்றும் குறித்த வாகனங்களுக்கான எச்எஸ் குறியீடுகள் குறித்து ஆராய்வதற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது.