வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பொலனறுவை சிறி விஜயபா பிரிவெனாவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் சங்கைக்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணியோத்சவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பொலனறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

பொலனறுவை மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பொலனறுவை சிறி விஜயபா பிரிவெனாவின் ஓய்வுபெற்ற பிரதி பிரிவெனாதிபதி சங்கைக்குரிய அலவ்வ ஸ்ரீ ஞானவாச நாயக்க தேரருக்கு அப் பதவிக்குரிய ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி; வழங்கி வைத்தார். 

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சிறந்த மற்றும் ஒழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களின் போது இவ்வாறான கல்வியறிவுள்ள, அறிவாளிகளான மற்றும் முன்மாதிரியான தேரர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்கப்பட்டமையானது ஒரு முக்கிய நிகழ்வாகும் எனக் குறிப்பிட்டார். 

தேரவாத பௌத்த மதம் தொடர்பான சர்வதேச மத்திய நிலையமாக எமது நாட்டை மாற்றும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் என்ற வகையில் தான் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கல்வியறிவுள்ள, அறிவாளிகளான பௌத்த தேரர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமாக உள்ளதெனத் தெரிவித்தார். 

உடரட்டை அமரபுர மகா நிக்காயாவின் பதில் மகாநாயக்கர் ராஜகீய பண்டிதர் சங்கைக்குரிய நுவரெலியா சந்திரஜோதி நாயக்க தேரர், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாதிபதி சங்கைக்குரிய வெலமிட்டியாவ குசலதம்ம நாயக்க தேரர், சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத், நாலக்க கொலொன்னே மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பெருந் தொகையான பௌத்த மக்கள் இதில் கலந்து கொண்டனர்.