(எம்.மனோசித்ரா)

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட மாட்டாது.

எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அமெரிக்காவின் கரங்களில் கோத்தாபயவின் அரசியல் : அஜித் பி பெரேரா | Virakesari .lk

நீதிமன்ற விடுமுறை நாட்களை அவதானித்து திட்டமிட்ட வகையில் இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டமூலமொன்றுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக பிரஜைகளுக்கு காணப்படும் அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுயாதீன குழுவொன்றை நியமித்து ஆராய்ந்துள்ளது.

அதற்கமைய குறித்த சட்ட மூலமானது அரசியலமைப்பின் 3 , 4 , 12 (1) உறுப்புரைகளுக்கு முரணானது என்றும் , எனவே இந்த சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் இதன் ஊடாக நாட்டுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை அனுமதிக்க முடியாது.

அத்தோடு நீதிமன்ற விடுமுறை நாட்களை அவதானித்து திட்டமிட்ட வகையில் இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டமூலமொன்றுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக பிரஜைகளுக்கு காணப்படும் அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு ஏன் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பின் 3 , 4 , 12 (1) உறுப்புரைகளுக்கு முரணானது என்பதோடு , அதன் 68 ஆவது உறுப்புரைக்கமைய ஆணைக்குழுவின் சட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு தண்டப்பணம் அறிவிடவும் , தண்டனை வழங்கவும் முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைமுகநகர ஆணைக்குழு 5 - 7 உறுப்பினர்களைக் கொண்டதாகக் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர , அந்த உறுப்பினர்கள் இலங்கை பிரஜைகளா அல்லது வேறு நாட்டு பிரஜைகளா என்பது குறித்து எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை. எனவே எந்தவொரு பிரஜையாலும் இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய நிலைமை இதன் மூலம் ஏற்படும்.

அத்தோடு இந்த ஆணைக்குழுவால் உருவாக்கப்படும் சட்டங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமற்றது என்ற ஏற்பாடுகளே காணப்படுகின்றன.

வழமையாக பிரதேச சபைகளில் துணை சட்டங்கள் உருவாக்கப்பட்டால் கூட அதற்கு பாராளுமன்றம் அனுமதியளிக்க வேண்டும். ஆனால் துறைமுக நகர சட்ட உருவாக்கம் இந்த நடைமுறைக்கு முரணானதாகும். ஏன் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும். இதனால் நாட்டுக்கு என்ன பயன்? இதன் மூலம் இலங்கையின் சட்டத்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும்.

எனவே பாராளுமன்றத்திற்கும் அப்பாற் சட்டத்தை உருவாக்கும் நிறுவனமொன்று ஒரு நாட்டில் இயங்குமாயின் அது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.

அவ்வாறு இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் காணப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது சர்வசன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம் ஒரே நாடு , இரு சட்டம் அல்லது ஒரு நாட்டுக்குள் இரு நாடுகள் என்ற நிலைமை தோன்றியுள்ளது. 2020 இல் உருவாக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திலுள்ள உள்ளடக்கங்கள் ஏன் புதிய சட்ட மூலத்தில் நீக்கப்பட்டுள்ளது ? இந்த செயற்பாட்டை நாட்டை ஆதரிக்கும் செயற்பாடாகக் கருத முடியாது.

இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் , இது அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என்பதையே நீதிமன்றம் ஆராயும். அவ்வாறில்லை என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா ?  அல்லது சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டுமா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும்.

மாறாக கொள்ளை ரீதியான விடயங்களில் நீதிமன்றம் அவதானம் செலுத்தாது. அதனை தீர்மானிக்க வேண்டியது பாராளுமன்றமேயாகும். இந்த சட்ட மூலத்திற்கு அமைய துறைமுக நகரில் சூது விளையாட்டிற்கு அனுமதி வழங்கக் கூடும். இது சரியானதா தவறானதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்காது.

எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஏற்ப செயற்பட தயார் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமையை நாட்டை நேசிக்கும் செயற்பாடாகக் கருத முடியாது. எனவே இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதன் ஊடாக கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இலங்கையின் வரலாற்று சம்பவங்களை நினைவில் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.