(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் அரச பாடசாலைகளின்  இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை பாரியதொரு வெற்றியாகும். 

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை சிறந்த முறையில் பின்பற்றினால் கொவிட்-19 வைரஸ் தாக்க சவாலை வெற்றிக் கொள்ள முடியும். மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாடசாலைகளில் பின்பற்ற  வேண்டிய சுகாதார பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் கல்வி அமைச்சினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையினை  அடிப்படையாகக் கொண்டு  அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று   ஆரம்பமாகுகின்றன..

 மாணவர்கள் பாடசாலைக்குள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவறுத்தல் குறித்து சுகாதார பணிப்பாளர்  வழங்கிய வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும்.

15ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை  தொடர்ச்சியாக முன்னெடுக்கவும், 16ற்கும் 30ற்கும் இடையிலான மாணவர்கள் உள்ள வகுப்பறையின் கற்றல் நடவடிக்கையினை இரு குழுக்களாக வேறுப்படுத்தி முன்னெடுக்கவும், 30 ற்கும் அதிகமான மாணவர்கள் உள்ள வகுப்பறையின் கற்றல் நடவடிக்கையினை 3 குழுவாக பிரித்து முன்னெடுக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 சமூக இடைவெளி பேணல், கைகழுவுதல், முககவசம் அணிதல், இடைவெவேளையின் போது உணவுகளை பகிர்ந்துக் கொள்ளல், வீட்டில் சமைக்கும் உணவினை மாத்திரம் உட்கொள்ளல், பாதுகாப்பான போக்குவரத்து  ஆகியவை தொடர்பில்  அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,  அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கையினை  வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமை மகிழ்வுக்குரியது.கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை சிறந்த முறையில் பின்பற்றினால் இச்சவாலை வெற்றிக் கொள்ள முடியும். என்றார்.